சொந்த மாவட்டத்தில் சார்பதிவாளர்கள் பணிபுரியக்கூடாது: பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் அதிரடி நடவடிக்கை

சென்னை: சார்பதிவாளர்கள் சொந்த மாவட்டம், வருவாய் வட்டத்தில் தொடர்ந்து பணிபுரிவதை தடுக்கும் வகையில் பணி மாறுதல் பட்டியலை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களை பணி மாறுதல் செய்ய பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றும் சார்பதிவாளர்கள் ஒரே மண்டலத்தில் 9 ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிக்க கூடாது. சார்பதிவாளர் தங்கள் சொந்த உப பதிவு மாவட்டத்தில் பணியமர்த்தப்படவோ அல்லது சொந்த வருவாய் மாவட்டத்தில் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது.

அதே போன்று, சார்பதிவாளர் தங்களது சொந்த வருவாய் வட்டத்தில் பணியமர்த்தக்கூடாது. மேலும் உதவியாளர்கள் சார்பதிவாளர் கூடுதல் பொறுப்பில் 15 நாட்களுக்கு மேல் நீடிக்க கூடாது என்று பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டு இருந்தார். இதன் மூலம், அதிக வருவாய் வரும் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஒரு சிலர் மட்டுமே பணிபுரிவதை தடுக்க முடியும். அதே போன்று, உதவியாளர்களும் சார்பதிவாளர் அலுவலகங்களில் பொறுப்பு அலுவலராக நியமனம் செய்வதை தடுக்க முடியும். இது தொடர்பாக பதிவுத்துறை ஐஜி நேர்முக உதவியாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவுத்துறை பயிற்சி நிலைய இயக்குனருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அதில், அனைத்து மண்டலங்கள், பதிவு மாவட்டங்களில் பணிபுரியும் மாவட்ட பதிவாளர்கள், சார்பதிவாளர்கள் மற்றும் பயிற்சி சார்பதிவாளர்களின் சொந்த வருவாய் மாவட்டம் மற்றும் சொந்த வருவாய் வட்டம் விவரத்தை பதவி வாரியாக தயாரித்து தனித்தனியே அனுப்பி வைக்க கோரப்பட்டன. அதில், தங்கள் மண்டலம், பதிவு மாவட்டத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் பகராண்மையில் சார்பதிவாளர் பொறுப்பில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், உதவியாளர், சார்பதிவாளர் விவரங்களை அனுப்பவும் உத்தரவிடப்பட்டன.இதை தொடர்ந்து மாவட்ட பதிவாளர், சார்பதிவாளர், உதவியாளர்களின் விவரங்கள் பதிவுத்துறை ஐஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த விவரங்களை கொண்டு சார்பதிவாளர், உதவியாளர்களை பணி மாறுதல் செய்ய பதிவுத்துறை ஐஜி திட்டமிட்டு இருப்பதாக பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: