சென்னை: காந்தியடிகளின் 75வது நினைவு நாளை முன்னிட்டு காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்ட உருவப் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நாட்டில் ஜனவரி மாதம் 30ம் தேதி காந்தியடிகளின் நினைவு நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது 75வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், சர்வோதயா சங்கத்தினர் நிகழ்த்திய நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசைப் பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பிகே.சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
* கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை: காந்தி நினைவுநாளில் முதல்வர் சூளுரை
சென்னை: கோட்சேவின் வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம் என காந்தி நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் நேற்று சமூக வலைதளத்தில் கூறியதாவது: மக்களின் நலனே தேசத்தின் நலன் என உழைத்த உத்தமர் காந்தியடிகளின் நினைவுநாளில்,அன்பும் சகோதரத்துவமும் கொண்டு ஒற்றுமை பேணிட உறுதியேற்று, கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை எனச் சூளுரைப்போம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
