×

கே.வி.குப்பம் அருகே அரும்பாக்கம் கிராமத்தில் 100 ஆண்டு பழமையான பெருமாள் கோயில் புனரமைக்கப்படுமா?: கிராமமக்கள் கோரிக்கை

கே.வி.குப்பம்,: ‘‘100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்பு பெற்ற  பெருமாள் கோயில் சிதிலமடைந்து கிடக்கின்றன. இதனை புனரமைத்து பொதுமக்கள் வழிபட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கே.வி.குப்பம்  அடுத்த அரும்பாக்கம் எனும் கிராமம் உள்ளது. ஆந்திரா - தமிழக எல்லையில் உள்ள மலைகளில் உள்ள   நீரை பெறும் வகையில், செஞ்சி எனும் கிராமத்தில் ராஜாதோப்பு என்னும் அணை ஒன்று உள்ளது. இதனால்  கிராமங்களில் உள்ள  மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.

இந்த கிராமத்தில் சுமார் 100  ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கற்களால் ஆன லஷ்மி நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில்களின் பாதுகாப்பு சுவர்கள் சிறிதாக இருந்தாலும், கருங்கற்களில் எவ்வித பூச்சும் இல்லாமல் அப்படியே தூக்கி அடுக்கி வைக்கப்பட்டு காண்போரை கவரும் விதத்தில் உள்ளது. எனினும் கோயிலின் பிரகாரங்களை பக்தர்கள் சுற்றி வர முடியாத வகையில் செடிகள், முட்செடிகள் உள்ளிட்டவை சூழ்ந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலின்  வளாகத்தில் கோயில் பயன்பாட்டுக்காக வெட்டப்பட்ட பழங்கால கிணறு புதர்மண்டி பொலிவிழந்து காணப்படுகிறது.

இந்த கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறிய மண்டபம் ஒன்று இடிந்து சேதமடைந்து உள்ளது. அங்கு சாமி சிலைகள் எதுவும் இருந்ததா? அல்லது வேறு ஏதும் பயன்பாட்டிற்காக அந்த மண்டபம் இருந்ததா? என்பது தெரியவில்லை. மேலும் மண்டபத்தின் மீது மரங்கள் வளர ஆரம்பித்து சிதிலமடைந்து காணப்படுகின்றன. இந்த கோயிலுக்கு சொந்தமான  100 ஏக்கர்  நிலங்கள் அரும்பாக்கம், அன்னங்குடி, லத்தேரி, மாளியாப்பட்டு, தொண்டான்துளசி, அங்கராங்குப்பம், வடுகன்தாங்கல், எர்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளது.

கோயிலுக்கு சொந்தமான நிலங்களை சிலர் விளை நிலங்களாகவும், சிலவற்றை யாரிடம் இருப்பது என்று தெரியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டின்கீழ் உள்ள இந்த கோயிலில் பூஜை செய்யாமல் இருப்பதால்,  மூலவர் உட்பட சுவாமி சிலைகளை கோயில் வளாகத்தில் உள்ள ஒரு இடத்தில் தற்காலிக அறை  அமைத்து, வைத்துள்ளனர். கோயில் பயன்பாட்டில் இருந்தபோது ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், வெகு விமரிசையாக திருவிழா நடைபெறுமாம். அப்போது   ஆந்திர மாநிலம் சித்தேரியை சேர்ந்த ஆன்மிகவாதிகள் உணவு அருந்தி  இளைபாரிவிட்டு செல்வார்கள்   என்று கூறப்படுகிறது.

 இதுமட்டுமின்றி கூடுதலாக கோயிலின் பழைய வரலாறு எதுவும் இல்லாததால் அதனை அறிந்து கொள்ள முடியாதது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்துகிறது. எனவே தொல்லியல் துறையினர் இந்த சிதிலமடைந்த கோயிலை ஆராய்ச்சி செய்து அதன் வரலாற்றை கண்டறிந்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், ஆவணப்படுத்த வேண்டும். அந்த கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்து அங்குள்ள கிணற்றை தூர்வார வேண்டும். பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவரை பலப்படுத்த வேண்டும். எனவே, அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அரும்பாக்கத்தில்  தோற்றத்துடன் உள்ள இந்த கோயிலில்    கல்வெட்டுகள் ஏதேனும் உள்ளதா? என்று ஆராயவேண்டும். எங்கள் பகுதியிலுள்ள வித்தியாசமான வடிவமைப்பில் உள்ள இந்த இடத்தில்  அதன் மதிப்பு தெரியாமல், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே இதனை புனரமைத்து பல்வேறு பகுதி மக்களும் வந்து செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

Tags : KK VV ,Peramal temple ,Arumbakam village ,Kappam , 100 year old Perumal temple, villagers request
× RELATED கே.வி.குப்பம் அருகே கரை உடைந்த...