×

வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் தை மாத பிரமோற்சவ விழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆண்டுதோறும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக சுவாமி திருவீதி புறப்பாடு ரத்து செய்யப்பட்டு உள்புறப்பாடு மட்டும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் தமிழக அரசு சில தளர்வு அறிவித்திருந்தது. இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் மத வழிபாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது.

இதனால் பிரமோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று காலை கருட சேவையும், கோபுர தரிசனமும் நடைபெற்றது. இதில் உற்சவர் வீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள நாலுகால் மண்டபத்தை வலம்வந்து கோயில் நுழைவு வாயிலில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயில் வளாகத்தை சுற்றி `கோவிந்தா, கோவிந்தா’ என கோஷமிட்டனர். தொடர்ந்து 5வது நாள் நாளை(31ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்.

பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான பிப்ரவரி 2ம் தேதி  காலை திருதேர் திருவிழாவும், 9வது நாளான 4ம் தேதி தீர்த்தவாரியும், 10வது நாளான 5ம் தேதி வெட்டிவேர் சப்பரத்திலும் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கவும் உள்ளார். ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பிரமோற்சவ திருவிழாவில் திருவீதி உலா இந்த ஆண்டு இல்லாதது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர். 


Tags : Veeragava Perumal Temple Thai Pramorsava Festival Kolagalam , Veeragava Perumal Temple Thai Pramorsava Festival Kolagalam: Crowds of devotees participate
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்