திருவள்ளூர் அருகே கூவம் ஆற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு: எல்லை பிரச்னையில் போலீசார் போட்டி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பட்டரை பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் அழுகிய நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இறந்த நபர் அரை நிர்வாண கோலத்தில் இருந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதைக் கண்ட அங்கு மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் திருவள்ளூர் நகர போலீசார் மற்றும் மணவாள நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, திருவள்ளூர் மற்றும் மணவாள நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆற்றில் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த நபரின் உடலை பார்வையிட்டனர்.

ஆனால் அவரின் உடலை மீட்பது யார் என போலீசாருக்குள் எல்லை பிரிப்பது சம்பந்தமாக போட்டி ஏற்பட்டது. இதனால் போலீசார் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக இறந்தவரின் உடலை ஆற்றில் இருந்து மீட்காமல் பேச்சுவார்த்தை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் முடிவில் மதியம் இறந்தவரின் உடலை திருவள்ளூர் தாலுகா போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை செய்து வழக்குப்பதிவு செய்வது என முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: