30 ஆண்டு கால இந்தியா-இஸ்ரேல் உறவு பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘இந்தியா, இஸ்ரேல் இடையான 30 ஆண்டு கால உறவில், புதிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டிய சரியான தருணம் இது’ என பிரதமர் மோடி கூறி உள்ளார். இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நாளையொட்டி, பிரதமர் மோடி சிறப்பு செய்திகள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் மோடி, ‘‘இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு இடையிலான உறவு எப்பொழுதும் சிறப்பான வகையிலே இருந்து வருகிறது. இருநாடுகளுக்கிடையேயான உறவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கு இது சரியான  நேரம் ஆகும். புதிய இலக்குகளை நாம் நிர்ணயிக்க வேண்டும். பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு  இனிவரும் காலங்களில் மேலும் விரிவடையும் என நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.

இஸ்ரேலுக்கான இந்திய துாதர் சஞ்சீவ் சிங்லா கூறுகையில், ‘‘கடந்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையேயான உறவு  உயர் நிலைக்கு சென்றுள்ளது’’ என்றார். இந்தியாவுக்கான இஸ்ரேல் துாதர் நவர் கிலோன் கூறும்போது, ‘‘இருநாட்டு உறவின் 30வது ஆண்டு விழா இருநாடுகளுக்கும் இடையேயான உறவை அடுத்த 30 ஆண்டுகளுக்கு  எடுத்து  செல்வதற்கான சிறந்த வாய்ப்பாக கருதி செயல்பட வேண்டும்’’ என்றார். கடந்த 1950ம் ஆண்டு செப்.17ம் தேதி  இஸ்ரேல் நாட்டுக்கான அங்கீகாரத்தை இந்தியா வழங்கியது. அதன் பிறகு 1992ம் ஆண்டு தான் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது. பெகாசஸ் மென்பொருள் விவகாரம் தொடர்பாக மீண்டும் சர்ச்சையான நிலையில் இஸ்ரேல் உடனான உறவை பிரதமர் மோடி பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: