×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 44 ஆண்டு ஏக்கம் தீர்ந்தது: ஆஷ்லி பார்டி சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்ளூர் நட்சத்திரம் ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இத்தொடரில் 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆஸ்திரேலிய வீராங்கனை கோப்பையை முத்தமிட்டது, அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் டேனியலி கோலின்சுடன் (28 வயது, 30வது ரேங்க்) நேற்று மோதிய நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி (25 வயது), தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடி பதிலடி கொடுத கோலின்ஸ், ஒரு கட்டத்தில் 5-1 என முன்னிலை வகித்ததால், அந்த செட்டை மிக எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், உள்ளூர் ரசிகர்களின் ஆரவார ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய ஆஷ்லி அடுத்தடுத்து கோலின்சின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்து முன்னேறி 5-5 என சமநிலையை எட்டினார். கோலின்சும் விட்டுக் கொடுக்காமல் போராடியதால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது.

அதில் பதற்றமின்றி அமர்க்களமாக விளையாடிய ஆஷ்லி 6-3, 7-6 (7-2) என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி சாம்ம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் ஒரு செட்டில் கூட தோற்காமல் கோப்பையை முத்தமிட்டுள்ள ஆஷ்லி, 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸி. ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் உள்ளூர் வீராங்கனை என்ற பெருமையை தட்டிச் சென்றார். சொந்த மண்ணில் நடக்கும் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த வெற்றியை ஆஸி. மக்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகம் பொங்கக் கொண்டாடி வருகின்றனர்.

* தொழில்முறை கிரிக்கெட் வீராங்கனையாகும் முயற்சியில் 2014ம் ஆண்டில் டென்னிசில் இருந்து விலகியிருந்த ஆஷ்லி, தற்போது மகளிர் டென்னிசில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக இருப்பதுடன் ஆஸி. ஓபனையும் வென்று மகத்தான சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 1978ல் ஆஸி. ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை கிறிஸ்டைன் ஓ நீல், நேற்று ஆஷ்லிக்கு கோப்பையை வழங்கி பாராட்டினார்.
* ஆஷ்லி வென்ற 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. முன்னதாக, 2019ல் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தையும் கடந்த ஆண்டு விம்பிள்டன் பட்டத்தையும் அவர் வென்றிருந்தார்.

* மார்சிங்கோ அசத்தல்
ஆஸ்திரேலிய ஓபன் சிறுமியர் ஜூனியர் பிரிவில் குரோஷியா வீராங்கனை பெத்ரா மார்சிங்கோ (16 வயது, நம்பர் 1) சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சோபியா கோஸ்டுலாஸுடன் (16 வயது, பெல்ஜியம், 8வது ரேங்க்) நேற்று மோதிய மார்சிங்கோ 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

* புரூனோ அமர்க்களம்
ஆஸி. ஓபன் ஜூனியர் சிறுவர் பிரிவில் அமெரிக்காவின் புரூனோ குஸுஹரா (17 வயது, நம்பர் 1) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்குடன் (4வது ரேங்க்) மோதிய புரூனோ 7-6 (7-4), 6-7 (6-8), 7-5 என்ற செட் கணக்கில் 3 மணி, 43 நிமிடம் கடுமையாகப் போராடி கோப்பையை தட்டிச் சென்றார்.

* நடாலுடன் இன்று மெட்வதேவ் மோதல்
ஆஸ்திரேலிய ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இன்று ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடாலுடன் (35 வயது, 6வது ரேங்க்) ரஷ்யாவின் டேனியல் மெட்வதேவ் (25 வயது, 2வது ரேங்க்) மோதுகிறார். கிராண்ட் ஸ்லாம் வேட்டையில் ரோஜர் பெடரர் (சுவிஸ்), நோவாக் ஜோகோவிச் (செர்பியா) ஆகியோருடன் சமநிலை வகிக்கும் நடால் (தலா 20 சாம்பியன் பட்டங்கள்), மெட்வதேவை வீழ்த்தி மகத்தான சாதனை படைப்பாரா என்பதே டென்னிஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் பைனலில் ஜோகோவிச்சை வீழ்த்தி அதிர்ச்சி அளித்த மெட்வதேவ் தொடர்ச்சியாக 2வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குவதால் போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
* இருவரும் இதுவரை 4 முறை மோதியுள்ளதில் நடால் 3 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
* 2019 யுஎஸ் ஓபன் பைனலில் மெட்வதேவுடன் மோதிய நடால் 5 செட்கள் கடுமையாகப் போராடி பட்டம் வென்றார்.
* 2020 ஏடிபி பைனல்ஸ் தொடரில் நடாலுக்கு எதிராக நேர் செட்களில் மெட்வதேவ் வெற்றி பெற்றார்.

Tags : Australian Open ,Ashley , The 44-year-old nostalgia for the Australian Open tennis is over: Ashley is the party champion
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...