×

காவிரி மேலாண்மை வாரியத்துக்காக போராட்டம் வேல்முருகன் உள்ளிட்ட 17 பேர் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 17 பேர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் 2018ம் ஆண்டு போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், செயலாளர்கள் வேணுகோபால், சரத்பாபு உள்ளிட்ட 17 பேர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வேல்முருகன் உள்ளிட்ட 17 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு பதிவு செய்து பிறகு சேர்க்கப்பட்ட பிரிவுகளை மாற்றி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, வேல்முருகன் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக பதிவான வழக்கில் முகாந்திரம் இல்லை எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Chennai High Court ,Velmurugan , Chennai High Court quashes case against 17 including Velmurugan
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...