×

பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்: விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதை பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தேமுதிக வரவேற்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இன்னும் குறையாத நிலையில், ஏற்கனவே அமலில் இருந்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகளை தமிழக அரசு ரத்து செய்திருப்பது நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவே என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது அனைத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்ட பிறகு பள்ளிகளை ஏன் திறக்க கூடாது என்ற கேள்வி எழக்கூடும் என்பதற்காகவே பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என அறிவித்திருப்பது தேர்தலுக்காகவே என எண்ணத் தோன்றுகிறது. தேர்தல் முடிந்த பின் புதிய வைரஸ் பரவி வருவதாக கூறி தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல் படுத்தமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். எனவே, மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகளை நடத்தலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : Vijayakand , Direct classes for 10th, 11th and 12th class students only considering the general examination: Vijayakanth's request
× RELATED அனல் பறக்கும் தமிழக தேர்தல் களம்: நாளை...