அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் குடமுழுக்கு நடத்த அனுமதி பெற புதிய நடைமுறை: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வந்து ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலைச் சேர்ந்த கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த ஆணையர் நிலையில் அனுமதி வழங்கப்பட்டுவருகிறது. குடமுழுக்கு அனுமதி வேண்டி மண்டல இணை ஆணையர்களால் அனுப்பப்படும் முன்மொழிவில் முழுமையான ஆவணங்கள் இணைத்து அனுப்பப்படாததால் திருக்குடமுழுக்கு நடத்த அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு இனி வரும் காலங்களில் குடமுழுக்கு அனுமதி வேண்டி வரப்பெறும் அறிக்கைகளில் சரிபார்ப்பு பட்டியலை பூர்த்தி செய்து இணை ஆணையரால் சான்றொப்பம் இடப்பட்டு சரிபார்ப்பு பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இனங்களுக்கு உரிய ஆவண நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். குடமுழுக்கு நடத்த அனுமதி கோரி இணை ஆணையர் பரிந்துரை செய்யும் போது, கோயில் பெயர் மற்றும் விவரம், தொல்லியல்துறை கருத்துரு வழங்கிய அலுவலர், மண்டலக்குழு கருத்து பெறப்பட்ட நாள், மாநில வல்லுநர் குழு கருத்து பெறப்பட்ட நாள், திருப்பணி வேலைகளுக்கு நிர்வாக அனுமதி உத்தரவு, மதிப்பீடு அங்கீகாரம் உத்தரவு ஆகிய  நகல்கள் இணைக்கப்பட்டதா என பார்க்க வேண்டும்.

மதிப்பீட்டு தொகை, பாலாலயம் மேற்கொள்ள வழங்கப்பட்ட அனுமதி உத்தரவு, சிலைகள் அகற்றாமல் பாலாலயம் செய்யப்பட்டதா, கும்பாபிஷேக செலவுகள் எந்த நிதியின் மூலம் செய்யப்படவுள்ளது. கும்பாபிஷேக தேதி குறித்து சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் கருத்து பெறப்பட்டுள்ளதா, கும்பாபிஷேக தேதி, குடமுழுக்கு நடத்துவதற்கான அறங்காவலர் குழு தீர்மானம், திருப்பணிக்குழு உள்ளது எனில் தீர்மானம், அஷ்டபந்தன மருந்து சார்ந்த இணை ஆணையரால் வழங்கப்பட்ட அனுமதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரிபார்ப்பு பட்டியலில் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: