×

இந்திய ஆட்சிப்பணி விதிகளின் திருத்தத்தால் அரசு நிர்வாகமே நிலைகுலைந்துவிடும்: வைகோ காட்டம்

சென்னை: இந்திய ஆட்சிப்பணி விதிகளில் மேற்கொள்ளப்படும் திருத்தம் அரசுப் பணி நிர்வாகத்தை நிலைகுலையச் செய்துவிடும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், “இந்திய ஆட்சிப்பணி விதிகள், 1954-இல், விதி எண் 6-இல் திருத்தங்கள் மேற்கொள்ள பாஜக அரசு குறிப்பு ஆணை வெளியிட்டு, அவற்றை மாநில அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி அனுப்பி கருத்துகளை கேட்டு இருக்கிறது. மத்திய அரசு நினைத்தால் மாநிலங்களில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை மத்திய அரசின் பணிக்கு அழைத்துக் கொள்ளலாம். மாநில அரசின் ஒப்புதலுடன்தான் இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை மத்திய அரசிற்கு பணி இடமாற்றம் செய்ய முடியும் என்று நடைமுறையில் உள்ள விதியைத்தான் பாஜக அரசு திருத்தம் செய்ய முனைந்து இருக்கிறது.

மாநில அரசுகளுடன் கலந்தாய்வுச் செய்யத் தேவை இல்லை; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., அலுவலர்களை விடுவிக்க மாநில அரசின் தடை இல்லா சான்று அவசியம் இல்லை. மத்திய அரசு வரையறுத்துள்ள காலக்கெடுவிற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியை மாநில அரசு விடுவிக்காவிடினும், அவர் குறிப்பிட்ட தேதியில் இருந்து மத்திய அரசு அதிகாரியாகவே கருதப்படுவார். மத்திய அரசின் பணியிட மாற்றத்தில் மாநில அரசுக்கு கருத்து வேறுபாடு எழுந்தால், இறுதியில் ஒன்றிய அரசின் முடிவை ஏற்பதைத் தவிர மாநில அரசுக்கு வேறு வழி இல்லை.

மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு இருக்கும் இந்திய ஆட்சிப்பணி விதி 6-இன் திருத்தங்கள், முழுக்க முழுக்க மத்திய அரசின் எதேச்சதிகாரத்தை மாநில அரசுகளின் மீது திணிக்கும் முயற்சியாகும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்த்து எறிந்து, கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு உலை வைக்கும் இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தத்தை கைவிட வேண்டும் என்று பா.ஜ.க அல்லாத மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளன.

மத்திய பா.ஜ.க. அரசு உத்தேசித்துள்ள இந்திய ஆட்சிப்பணிகள் விதி திருத்தங்கள், மாநில சுயாட்சிக்கு எதிரானது. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நிலவும் ஒரு இணக்கமான சூழலுக்கு இந்தத் திருத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசின் அதிகார குவிப்புக்கு வழி வகுக்கும் என்று பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோரும் எதிர்த்து இருக்கின்றனர்.

மாநில அரசுகளின் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு மத்திய அரசு, இந்திய ஆட்சிப்பணிகள் விதிகள் திருத்தம் குறித்த கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மீண்டும் கடிதம் எழுதி இருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மாநில அரசுகளை நகராட்சிகளைப் போல கருதி நசுக்கி வரும் மத்திய பா.ஜ.க. அரசு டெல்லியில் அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு, ஆட்டிப்படைத்து ஆதிக்கம் செய்ய நினைப்பது மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பை செல்லரிக்கச் செய்துவிடும். இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களாக ஆட்சிப்பணி தேர்வு எழுதாமல், வெளியாட்களையும், தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களையும் நியமிக்கலாம் என்பதை நடைமுறைப்படுத்தி, ஆட்சிப்பணி முறைமையை சீர்குலைத்துவிட்டது பா.ஜ.க. அரசு.

தற்போது விதிகளில் திருத்தம் கொண்டு வந்து மாநில அரசுகளைக் கிள்ளுக் கீரையாக கருதி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை விருப்பம்போல பந்தாடலாம் என்று முடிவெடுத்து இருப்பது அரசுப்பணி நிர்வாகத்தையே நிலைகுலையச் செய்துவிடும். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்திய ஆட்சிப் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என்று வைகோ கூறியுள்ளார்.

Tags : வைகோ,இந்திய ஆட்சிப்பணி,பா.ஜ.க. அரசு
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...