×

இஸ்ரேலிடம் இருந்து 2017-ல் பெகாசஸை வாங்கியது இந்தியா: நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியீடு

நியூயார்க்: இந்தியா- இஸ்ரேல் இடையே கடந்த 2017ம் ஆண்டு சுமார் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்புத்துறையின்  முக்கிய அம்சமே உளவு மென்பொருளான பெகாசஸ் கொள்முதல் தான் என்று பிரபல அமெரிக்க இதழான நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெகாசஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் எந்த  வர்த்தகமும் செய்யவில்லை என்று ஒன்றிய அரசு மறுத்த நிலையில் வெளியாகியுள்ள புதிய தகவல் உளவு விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு  இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெகாசஸ் மென்பொருள் உளவு விவகாரம் தொடர்பாக நியூயார்க் டைம்ஸ் புலனாய்வு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 70 ஆண்டுகளில் முதல் இந்திய பிரதமராக கடந்த 2017ம் ஆண்டு பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டது. அப்போது இஸ்ரேலுடன் இந்திய செய்துகொண்ட ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் தொடர்பான சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக பெகாசஸ் கொள்முதல் இருந்ததாக நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கம் அதிகமானதாக கூறியுள்ள அந்த பத்திரிக்கை, சில மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் இந்தியா வந்து சென்றதையும் 2019-ம் ஆண்டு ஐநா பொருளாதார, சமூக கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததையும் குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு கண்காணிப்பிற்காக பெகாசஸ் செயலியை சோதனை அடிப்படையில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு வாங்கி பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. செய்தியாளர்களை குறிவைக்க மெக்சிகோவும், சவுதி அரேபிய அரசும் பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி இருப்பதாக கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெகாசஸ் மென்பொருளை தயாரிக்கும் இஸ்ரேலில் NSO நிறுவனத்துடன் இந்தியா எந்த வர்த்தகமும் மேற்கொள்ளவில்லை என்று கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்த நிலையில் 2017-ம் ஆண்டே பெகாசஸ் மென்பொருள் இந்தியா வாங்கியுள்ளதாக வெளியான தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த விவகாரம் மீண்டும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.


Tags : India ,Pegasus ,Israel , India buys Pegasus from Israel in 2017: New York Times article published
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...