×

நம்முடைய பாதுகாப்பு நம்மிடம்தான் உள்ளது!

நன்றி குங்குமம் தோழி

‘‘பெண்கள் குறித்த பாலியல் சம்பந்தமான செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சமூக வலைத்தளம் என்று குறிப்பிட்டு இருந்தாலும், அதனை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை. தங்களைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளை எல்லாம் அவர்கள் இணையத்தில் பகிரங்கமாக வெளியிடுவதால் இதன் பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. தேசிய குற்றப்பதிவு பணியகத்தின்படி 2018ம் ஆண்டு மட்டுமே பெண்களுக்கு எதிராக 3.78 லட்சம் குற்றங்கள் பதிவாகியுள்ளன’’ என்கிறார் சென்னையை சோர்ந்த மாதேஷ்வரி பரமகுரு.

சென்னைவாசியான இவர் மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்த்து வருகிறார். ‘‘எனக்கு படிக்க பிடிக்கும். தினமும் தவறாமல் தினசரியினை படித்திடுவேன். அதில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் குறித்த செய்திகள் தவறாமல் வெளியாவதை கண்டேன். குறிப்பாக சமூக வலைத்தளங்களால் ஏற்படும் பாதிப்பு தான் இந்தப் பிரச்னைக்கு ஒரு அடித்தளமாக இருப்பதைக் கண்டேன். பொள்ளாச்சி சம்பவம் மற்றும் காசி போன்றவர்களிடம் பெண்கள் சிக்கிக் கொள்வதை படித்த போது எனக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது’’ என்றவர் சமூக வலைத்தளங்களை பெண்கள் எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்று பட்டியலிட்டார்.

‘‘நம் காலத்தில் செல்போன் என்றால் அதில் மற்றவரை அழைத்து பேசலாம் அல்லது குறுஞ்செய்திகளை அனுப்பலாம். ஆனால் இப்போது இருக்கும் செல்போன்களில் நாம் நினைக்க முடியாத பல விஷயங்களை செய்ய முடியும். மேலும் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ்சப், டிக் டாக், யுடியூப்... என சமூக வலைத்தளங்கள் மக்களை குறிப்பாக இளம் தலைமுறையினரை கட்டிப்போட்டு வைத்துள்ளது. அதுதான் உலகம் என்றாகிவிட்டது. உதாரணத்திற்கு, முகநூலில் நாம் பதிவு செய்திருந்தால், நமக்கு தெரிந்தவர்கள் மட்டுமல்லாமல் முகம் தெரியாதவர்களும் நம்முடைய நட்பு வட்டாரத்தில் இருப்பார்கள். அவர்களை நாம் இணைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முடிந்தவரை பெண்கள் ரியல் லைஃப்பில் தேவையில்லாதவர்களை இணைக்காமல் இருப்பது நல்லது. இது எல்லை மீறும் போது தான் பிரச்னைகள் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் ஹாய் என்று ஆரம்பிக்கும் நட்பு காலப்போக்கில் வேறு வழியில் பயணமாகிறது.

இறுதியில் வீடியோ மிரட்டல், சைபர் ஸ்டாக்கிங், பணப்பறிப்பு என்று இக்கட்டான சூழலுக்கு பெண்கள் தாமாகவே வலையில் சிக்கிக் கொள்கிறார்கள்.
அடுத்து இவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டியது... தங்களை பற்றிய தனிப்பட்ட செய்திகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டில் யாரும் இல்லை... ஹோம் அலோன்... என்று டிவிட்டரில் பதிவு செய்வார்கள். அந்த ஒரு பதிவு பல ஆண்களின் கண்களை உறுத்த ஆரம்பிக்கும். லேசாக தூண்டில் போடுவார்கள். இவர்களும் அதில் சிக்கிக் கொள்வார்கள். மூன்றாவதாக... எக்காரணம் கொண்டும் உங்களின் தனிப்பட்ட புகைப்படத்தை பதிவிட வேண்டாம். உங்கள் செல்போனில் நீங்கள் இருக்கும் இடத்தை வெளியிடக் கூடாது. அதன் மூலம் உங்களை பற்றிய செய்திகள்  தவறான முறையில் பயன்பட வாய்ப்புள்ளது. இவை எல்லாம் பொதுப்படையாக பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.

இவை தாண்டி அவர்கள் ஒவ்வொரு சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் போது அதில் உள்ள பாதுகாப்பு அமைப்பினை தெரிந்து கொள்வது அவசியம். இதன் மூலம் உங்கள் கைபேசியில் உள்ள செய்தினை மூன்றாம் நபர் கண்காணிப்பதை தவிர்க்கலாம். எக்காரணம் கொண்டும் அடுத்தவரின் செல்போனில் உங்களின் சமூகவலைத்தளங்களை பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு உபயோகிக்க நேர்ந்தால், அதில் Incognito Mode உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். கடைசியாக எந்த ஒரு சமூக ஊடகக் கணக்கை பயன்படுத்தி இருந்தாலும், அதில் இருந்து கட்டாயமாக வெளியேறி விடுவதை வழக்கமாக கொள்ளுங்கள்’’ என்றவர் பெண்கள் மட்டுமல்ல ஆண்களுக்கும் விழிப்புணர்வு அவசியம் என்றார்.‘‘பொதுவாக பெண் குழந்தைகளிடம்தான், முகம் தெரியாதவர்களுடன் பேசக்கூடாது, பொது இடத்தில் மாரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும், ஆண் நண்பர்களிடம் கவனமாக பழக வேண்டும்... என்று பல எச்சரிக்கைகளை கொடுப்போம்.

ஆண்பிள்ளைகளுக்கும் இது போன்ற அட்வைஸ்கள் அவசியம். பெண்களை எவ்வாறு மதிக்கவேண்டும் என்று சிறு வயதில் இருந்தே அவர்களுக்கு சொல்லித் தரவேண்டும். இப்போது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடுவதால், வீட்டில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களால் கண்காணிக்க முடியவில்லை. மேலும் இன்றைய தலைமுறையினர் நாம் சொல்லும் ஆலோசனைகளை கேட்கும் நிலையிலும் இல்லை. அவர்களின் மனநிலையை அறிந்து கொண்டு, அவர்கள் செய்யும் தவறினை புரியும் படி எடுத்து சொல்ல வேண்டும். இது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. என்னதான் பெண்கள் படித்து வேலைக்கு சென்றாலும், இன்றும் அவர்கள் கண்ணாடி போன்ற நிலையில் தான் உள்ளார்கள். அவர்கள் செய்யும் ஒரு சிறு தவறு பெரிய பிம்பமாக மொத்த குடும்பத்தையும் பாதிக்கும். சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் சுற்றுச்சூழல் அமைப்பினை உருவாக்கும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது’’ என்றார் மாதேஷ்வரி பரமகுரு.

தொகுப்பு: ப்ரியா

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!