×

திமுகவுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கே.எஸ்.அழகிரி, வேல்முருகன் சந்திப்பு: அண்ணா அறிவாலயத்தில் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19ம்தேதி தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று காலை தொடங்கியது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன.  திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை அந்தந்த மாவட்ட அளவில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கான இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். அவருடன் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வந்திருந்தனர். இவர்கள், திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டிய வார்டுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை தொடர்ந்து வெளியில் வந்த கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: தென் இந்தியாவில் இருந்து எந்த அலங்கார ஊர்திகளும் அனுமதிக்கப்படவில்லை. இது ஒரு மிகப் பெரிய பின்னடைவாக நாங்கள் கருதுகிறோம். தமிழக முதல்வர், ஒன்றிய அரசுக்கு தனது கடுமையான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநகராட்சி, நகராட்சி தலைவர் பதவியிடங்கள் குறித்து தேர்தல் முடிவுக்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.  காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் திமுக மாவட்ட செயலாளர்களுடன் வார்டு பங்கீடுகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் விருப்பப்படும் தொகுதிகள் கேட்டுள்ளோம். அவற்றை பரிசீலிப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் மாவட்ட அளவில் இன்னும் 3 நாட்களுக்குள் வெளியிடப்படும். பேச்சுவார்த்தை எல்லாம் மகிழ்ச்சியாக  சென்று கொண்டிருக்கிறது. தேவை வரும் போது அடுத்தகட்டமாக முதல்வரை  சந்திப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

 தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், இடப்பங்கீடு குறித்து முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய பின்னர் த.வா.க. தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் வாழ்வுரிமை கட்சிக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தொகுதிகளை ஒதுக்க முதல்வரிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம்’’ என்றார்.  முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Dimukhu ,Md. KKA K. ,Stalin ,S. Salagiri ,VelMurugan ,Anna Krakalaya , Allocation, talks with DMK, Chief Minister MK Stalin, Meeting with KS Alagiri, Velmurugan
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...