×

ஸ்பைஸ்ஜெட் விவகாரம்; உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், அதன் விமான இயந்திரங்களை பராமரிக்கவும், பழுது பார்க்கவும் சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுஸி ஏஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, இயந்திரங்களை பராமரித்தது, பழுது பார்த்ததற்காக சுவிஸ் நிறுவனத்திற்கு ஸ்பெஸ் ஜெட் நிறுவனம் ரூ.180 கோடி பணம் தர வேண்டி உள்ளது. இந்த தொகையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் செலுத்தவில்லை எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுவிஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நிலுவைத் தொகையை தராத வரை ஸ்பைஸ் ஜெட் விமான சேவையை நிறுத்துமாறு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் போபண்ணா, ஹமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்பைஸ் ஜெட் தரப்பில் ஆஜரான மூத்த வக்கில் ஹரிஷ் சால்வே, ‘இது ஒரு தீவிரமான பிரச்னை.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை நடத்த விரும்பவில்லை என்றால், நாங்கள் திவாலானதாக அறிவித்து விட்டு நிறுவனத்தை கலைத்திருப்போம். எனவே, இப்பிரச்னையை பேசித் தீர்க்க முயற்சிக்கிறோம். அதற்கு 3 வாரம் அவகாசம் வேண்டும்,’ என்றார். இதற்கு சுவிஸ் நிறுவன தரப்பும் ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து, ஸ்பைஸ் ஜெட் விமான சேவையை நிறுத்தும் உத்தரவை 3 வாரத்திற்கு நிறுத்தி வைத்து, விசாரணையை தலைமை நீதிபதி ரமணா ஒத்தி வைத்தார்.

Tags : SpiceJet , The SpiceJet affair; Prohibition of High Court Order: Supreme Court Order
× RELATED சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை