×

ரஞ்சி கோப்பை தொடர் 2 கட்டமாக நடத்த பிசிசிஐ திட்டம்: செயலர் ஜெய்ஷா தகவல்

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரை 2 கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய செயலர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 சீசன்களாக ரஞ்சி கோப்பை தொடர் நடைபெறாத நிலையில்,  சில நாட்களுக்கு முன்பு நடந்த பிசிசிஐ நிர்வாகிகள் கூட்டத்தில், ரஞ்சி போட்டியை நடத்த வேண்டும் என்று மாநில சங்கங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், ரஞ்சி போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: இந்த ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரை 2 கட்டங்களாக நடத்த  வாரியம் முடிவு செய்துள்ளது.

முதல் கட்டத்தில் லீக் ஆட்டங்களையும், ஜூன் மாதத்தில் நாக் அவுட் ஆட்டங்களையும் நடத்த திட்டமிட்டுள்ளோம். கொரோனாவால் வீரர்கள் உட்பட யாரும் பாதிக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து எங்கள் குழு தீவிர ஆலோசனையில் இருக்கிறது. அதே நேரத்தில் ரஞ்சி போட்டியை நடத்துவதிலும் உறுதியாக இருக்கிறோம். காரணம் ரஞ்சி கோப்பை நாட்டின் மதிப்பு மிக்க உள்நாட்டு  போட்டியாகும். இந்தப்போட்டி ஆண்டுதோறும் மிகத் திறமையான வீரர்களை அடையாளம் காட்டி வருகிறது. எனவே இந்த முக்கிய போட்டியை கட்டாயம் நடத்துவோம். இவ்வாறு ஜெய்ஷா கூறியுள்ளார்.

அதன் மூலம் ஐபிஎல் போட்டிக்கு  முன்னதாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில்  ரஞ்சி போட்டியின் லீக் சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும். மே மாதம் ஐபிஎல் முடிந்ததும் ஜூன் மாதத்தில் ரஞ்சி போட்டியின்  நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது. அதற்கேற்ப  போட்டி அட்டவணையும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : BCCI ,Jaisha , BCCI plans to host Ranji Trophy in 2 phases: Secretary Jaisha
× RELATED கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்...