நீதிமன்றங்களில் நேரடி விசாரணை.! வழக்கறிஞர் சங்கம் வலியுறுத்தல்; பரிசீலிப்பதாக பொறுப்பு தலைமை நீதிபதி உறுதி

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் நேரடி விசாரணையை  தொடங்குவது தொடர்பாக இரண்டு வாரங்களில் உரிய முடிவை  எடுக்கவுள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி  கூறியதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை மற்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆன்லைன் மூலமே விசாரணை  நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், துணைத்தலைவர் சுதா, பொருளாளர் காமராஜ் உள்ளிட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரியை  நேற்று நேரில் சந்தித்து முறையிட்டனர்.

மருத்துவமனைகள், காவல் துறை, தலைமைச்செயலகம் என அத்தியாவசிய துறைகள் முழுமையாக இயங்கி வரும் நிலையில், நீதிமன்றங்களிலும் தமிழகம் முழுவதும்  நேரடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது, பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழ்நிலையிலும், தேர்தல் நடைபெற உள்ள சூழலில் சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றங்களில் முழுமையான விசாரணை நடத்த  வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பொறுப்பு தலைமை நீதிபதி. இரண்டு வாரத்தில் உரிய முடிவு  எடுக்கப்படும் என்று தெரிவித்ததாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விசாரணை நடைபெற்று வந்தாலும் கீழமை நீதிமன்றங்களில் முறையாக விசாரணை நடைபெறவில்லை. இதனால் மனுதாரர்கள், வழக்கறிஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

Related Stories: