எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டுக்கு இன்றும் நாளையும் நடக்கிறது

சென்னை: தமிழகத்தில்  புதிதாக துவங்கப்பட்டுள்ள, 11 அரசு மருத்துவ கல்லுாரிகள் உட்பட, மொத்தம்,  37 அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவ  கல்லுாரிகள் உள்ளன. இதில், அரசு மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் மாநில  ஒதுக்கீடுக்கு 6,999 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. 2 அரசு மற்றும்  சுயநிதி பல் மருத்துவ கல்லுாரியில், மாநில ஒதுக்கீட்டிற்கு 1,930  பி.டி.எஸ் இடங்கள் உள்ளன. சுயநிதி கல்லுாரிகளில் நிர்வாக  ஒதுக்கீட்டுக்கு, 1,145 எம்.பி.பி.எஸ்.,  635 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன.

இந்த  படிப்புகளுக்கு, 2021-22ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை  பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில்,  அரசு ஒதுக்கீட்டுக்கு 24  ஆயிரத்து 949 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டில் 14 ஆயிரத்து 913  மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்  ஒதுக்கீட்டுக்கு 1,806 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில்,  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு  பிரிவினர் ஆகியோருக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் நேற்று  காலை நேரடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில்  தொடங்கியது. இந்த கலந்தாய்வில் விளையாட்டு பிரிவில் மாணவர்கள், முன்னாள்  ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் என 91 பேர் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 88 பேர் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 71 எம்.பி.பி.எஸ் இடங்களும், இரண்டு பி.டி.எஸ் இடங்கள் என 73 பேர் இடங்களை தேர்வு செய்தனர். இதில் மாற்றுத்திறனாளிகள் 54 பேர், விளையாட்டு வீரர்கள் 8 பேர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 11 என 73 பேர் இடங்களை தேர்வு செய்தனர். மேலும் 12 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

 அதைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளை அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத  ஒதுக்கீட்டுக்கு 436 எம்.பி.பி.எஸ்., 97 பி.டி.எஸ் என 533 இடங்களுக்கான  கவுன்சிலிங் நடைபெறுகிறது. அதையடுத்து கொரோனாவால்  பொது பிரிவினக்கான கலந்தாய்வு வரும் 30ம் தேதி முதல் ஆன்லைனில்  https://www.tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய  இணையதளங்கள் மூலம் நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: