பொங்கல் பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனம்; குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி நடவடிக்கை

சென்னை: பொங்கல் பொருட்கள் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை சஸ்பெண்ட் செய்து அமைச்சர் சக்கரபாணி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். பொங்கல் பண்டிகையை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், 21 வகையான மளிகை பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 2.15 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் சில இடங்களில் தரம் குறித்தும் கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து உணவு துறை அமைச்சர் சக்கரபாணி விரிவான ஆய்வு நடத்தி சம்பந்தப்பட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து உணவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதில் சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்ட தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடை நீக்கம் செய்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கியதில் சில இடங்களில் ஏற்பட்ட குளறுபடிகளை மிக விரிவான விசாரணை நடத்தி முதல்வரிடம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: