×

மயிலை கபாலீஸ்வரர் கோயில் சிலை மாயம்; விசாரணை தாமதமானதற்கு என்ன காரணம்?: அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மயிலாப்பூரிலுள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 2004ம் ஆண்டில் குடமுழுக்கு விழா நடந்த போது புன்னைவனநாதர் சன்னதியில் உள்ள மயில் சிலை மாயமானது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 2018ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தது. விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் 2004ம் ஆண்டு நடந்த சம்பவம் குறித்து 2018ம் ஆண்டுதான் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் 85 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளனர். மாயமான சிலையை கண்டுபிடிக்க முடியாததால் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இயலவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது, உண்மை கண்டறியும் விசாரணை நடைபெறவில்லை என்று ரங்கராஜன் நரசிம்மன் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த அறநிலையத் துறை வழக்கறிஞர், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளது என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உண்மை கண்டறியும் விசாரணை தாமதமாக காரணம் என்ன?, அனைத்து ஆவணங்களுடனும் அறநிலையத்துறை ஆணையர் ஜனவரி 31ம் தேதி காணொலி மூலம் ஆஜராக வேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கு குறித்த ஆவணங்கள், விசாரணை ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Tags : Mayilai Kabaliswarar , Mayilai Kabaliswarar Temple Statue Magic; What is the reason for the delay in the trial?
× RELATED மயிலை கபாலீஸ்வரர் கோயில்...