×

தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல் என்பதை உணர்கிறோம்: நிதி அமைச்சரை சந்தித்து ரிசர்வ் வங்கி வருத்தம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து மாநில பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம் என தமிழக நிதி அமைச்சரை சந்தித்து ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலக பிரதிநிதிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நின்று மரியாதை செய்யாதது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்.சுவாமி தலைமையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் ஆகியோரை நேற்று காலையில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: குடியரசு தினத்தன்று (நேற்று முன்தினம்) ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.  எனினும், பின்னர் அதனை தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க சில தேவையற்ற கூற்றுகள் எழுப்பப்பட்டன.

தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை உணர்கிறோம். ஒரு ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு என்கிற முறையில், நாங்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம். இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை மண்டல அலுவலகத்தின் பிரதிநிதிகள், மண்டல இயக்குநர் என் சுவாமி தலைமையில், தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து இது தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை உறுதி செய்தனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Reserve Bank ,Finance Minister , We feel that the Tamil Thai greeting is the state song: The Reserve Bank is sad to meet the Finance Minister
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு