திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிய அத்தியாயம் பசுவின் பஞ்ச கவ்யத்தால் செய்யப்பட்ட சாம்பிராணி, ஷாம்பு, சோப்பு விற்பனை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புதிய அத்தியாயமாக, பசுவின் பஞ்ச கவ்ய பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட சாம்பிராணி, ஷாம்பு, சோப்பு விற்பனையை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று தொடங்கி வைத்தார். திருமலை- திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம் மற்றும் பசு கோமியம் ஆகிய பஞ்ச கவ்ய பொருள்களை கொண்டு கோவையை சேர்ந்த ஆசீர்வாதம் ஆயுர்வேத நிறுவனத்துடன் இணைந்து சாம்பிராணி, ஷாம்பு, சோப்பு, கொசுவர்த்தி சுருள் போன்ற 15 ரகமான பொருட்கள்  தயார் செய்யப்பட்டுள்ளது. இவற்றை ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு விற்பதற்கான சிறப்பு கவுண்டர் அமைக்கப்பட்டது.

அதன் முதல் விற்பனையை அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது: இந்துக்களின் காமதேனுவாக விளங்கும் பசு மூலம் மனிதர்களுக்கு தேவையான பல்வேறு பயன்கள் கிடைக்கிறது. அதில் பஞ்சகவ்ய பொருள்களான பால், தயிர், நெய், சாணம் மற்றும் கோமியம் கொண்டு 15 ரகமான பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழுமலையான் ேகாயில் மற்றும் அதனை சார்ந்த இதர கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தக்கூடிய மலர்களைக் கொண்டு ஊதுபத்தி தயார் செய்யப்பட்டு  விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தற்போது பஞ்சகவ்யம் பொருட்களால் தயார் செய்யப்பட்ட 15 விதமான பொருட்களும், சுவாமிக்கு பயன்படுத்திய பூக்களை கொண்டு தயார் செய்யப்பட்ட டாலர் செயின், பேப்பர் வெயிட், சுவாமியின் புகைப்படங்கள் ஆகியவையும் பக்தர்களுக்காக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ஏழுமலையான் கோயிலில் நெய்வேத்தியம் அனைத்தும் இயற்கை வேளாண் பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டு சுவாமிக்கு படைக்கப்பட்டு வருகிறது. இயற்கை வேளாண்மைக்கும், பசுவுக்கும் முக்கியத்துவம் அளிப்பதற்காக தேவஸ்தானம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* விரைவில் இலவச தரிசனம்

சுப்பா ரெட்டி அளித்த பேட்டியில், ‘‘நாடு முழுவதும் கொரோனா தொற்று சற்று குறைந்து வரக்கூடிய நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்து உள்ளது. எனவே, பக்தர்களை இலவச தரிசனத்தில் அனுமதிப்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் 8ம்  தேதி நடைபெறும் ரதசப்தமி அன்று ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி வீதிஉலா வர வேண்டி உள்ளது. அதனால், கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்றது போலவே, இம்முறையும் கோயிலுக்கு உள்ளேயே கல்யாண மண்டபத்தில் ரதசப்தமிக்கான வாகன சேவை பக்தர்கள் இல்லாமல் நடத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: