மணப்பாறையில் ஜிஹெச் செடிக்குள் பச்சிளம் பெண் குழந்தை வீச்சு

துவரங்குறிச்சி: மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள செடிக்குள் பச்சிளம் பெண் குழந்தையை வீசிய கல்நெஞ்ச தாயை போலீசார் தேடி வருகின்றனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை தலைமை அரசு வளாக ஆய்வக கட்டிடத்தின் பின்புற பகுதியிலிருக்கும் செடிகளுக்கிடையே இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. மருத்துவமனை பணியிலிருந்த தூய்மைப் பணியாளர்கள் குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது அங்கு பிறந்து 20 நாட்களே ஆன பெண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

குழந்தையை மீட்டெடுத்த பணியாளர்கள் அவசரப் பிரிவுக்கு கொண்டு சென்று பணி மருத்துவக்குழுவினரிடம் ஒப்படைத்தனர். குழந்தைக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்தனர். குழந்தை ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவதியுற்ற நிலையில் தீவிர சிகிச்சை சிசு பிரிவிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.புதன்கிழமைகளில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது வழக்கம். அப்படி சிகிச்சைக்கு வந்த நபர் குழந்தையை விட்டு சென்றிருக்கலாம் என மணப்பாறை போலீசார் முதற்கட்ட விசாரணையினை நடத்தி கல்நெஞ்ச தாயை தேடி வருகின்றனர்.மேலும் இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: