×

குந்தா அணையில் சேறு, சகதிகளை அகற்ற நடவடிக்கை

மஞ்சூர்: குந்தா அணையில் தேங்கியுள்ள சேறு, சகதிகளை அகற்ற விரைவில் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 நீர் மின்நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, கிளன்மார்கன், பைக்காரா உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் இந்த மின் நிலையங்களில் மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் குந்தா, கெத்தை மற்றும் பரளி மின் நிலையங்களின் மின்சார உற்பத்திக்கு முக்கிய நீராதாரமாக உள்ள குந்தா அணையை துார் வாராததால் பெருமளவு சேறு, சகதிகள் தேங்கியுள்ளது.

மேலும் பருவமழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் கரையோரங்களில் உள்ள விவசாயநிலங்கள் மற்றும் செடி, கொடிகள் மரங்கள் அடித்து செல்லப்பட்டு அணையில் கலக்கிறது. இதனால் குந்தா அணையில் 50 சதவீதத்திற்கும் மேல் சேறு, சகதியுடன் கழிவுகளும் தேங்கியுள்ளது. குறைந்தபட்ச மழை பெய்தாலே அணை நிரம்பி விடுகிறது. மேலும் சேறு, சகதிகளால் குந்தா அணையில் அமைந்துள்ள சுரங்க பாதையில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பால் கெத்தை மின் நிலையத்திற்கு நீர் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிப்பும் ஏற்படுகிறது.

இதைத்தொடர்ந்து குந்தா மற்றும் கெத்தை உள்ளிட்ட அணைகளை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் குந்தா அணையில் தேங்கியுள்ள சேறு, கழிவுகளை அகற்ற அணையை தூர்வார மின்வாரிய தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆய்வு பணிகளில் மின்வாரிய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kunda Dam , Action to remove mud and debris at Kunda Dam
× RELATED பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குந்தா அணையில் விநாயகர் சிலைகள் கரைப்பு