×

தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது, எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளின் அவமதிப்பு செயல்: அரசியல் தலைவர்கள் பலர் கண்டனம்!!

சென்னை: குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய போது, இருக்கையில் அமர்ந்து கொண்டு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நிற்காமல் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டனர். இது குறித்து கேள்வி கேட்ட நபர்களிடம் ‘எழுந்து நிற்க வேண்டும் என்று கோர்ட் ஆர்டர் கிடையாது’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்பிஐ அதிகாரிகளின் இந்த செயலுக்கு பிரபலங்களும் பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல, மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பதும் ஆகும். இது கடும் கண்டனத்துக்குரியது. நிகழ்ந்த சம்பவத்திற்கும், இனிமேல் இதுபோல் நடக்காமல் இருப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், என்றார்.

திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?, என்று தெரிவித்துள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
வெளியிட்டுள்ள செய்தியில், சமூகத்திற்கு வங்கிகள் மிகவும் முக்கியமானவை என்று தெரிவித்துள்ளார். வங்கிகளை வழிநடத்தும் ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் அனைவராலும் கவனிக்கப்படும் என்று கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு தான் மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கி அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியதாக பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் அதிருப்தி அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், தாய், தந்தை, ஆசானுக்கு
எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா?
அது சட்டமன்று; அறம்.

தமிழ்த்தாய் வாழ்த்தும்
அப்படியே

சட்டப்படியும்
எழுந்து நிற்கலாம்;
அறத்தின்படியும்
எழுந்து நிற்கலாம்.

இரண்டையும்
மறுத்தால் எப்படி?

தமிழ்த்தாய் மன்னிப்பாள்;
சட்டம்...?

திமுக எம்.பி. தயாநிதிமாறன் வெளியிட்டுள்ள பதிவில்,அனைவராலும் போற்றப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தமிழ்நாடே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. ஆனால் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அய்யோ பாவம்!இன்றைய குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அவர்களில் பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கிப் பிடித்து தடுத்தது எது? மாநில அரசின் அரசாணையை மதிக்க வேண்டும் என்பதுகூட புரியாதபடி தடுமாறியது ஏன்?, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Reserve Bank ,Tamil Nadu , தயாநிதிமாறன்,குடியரசு தின விழா, ரிசர்வ் வங்கி, அதிகாரிகள், தமிழ்த்தாய்
× RELATED மார்ச் 31-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று...