×

ஆஸி ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஸ்வியடெக், டேனியலி: போராடி வென்ற மெத்வதேவ்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் அரையிறுதியில் விளையாட மகளிர் பிரிவில்  இகா ஸ்வியடெக், டேனியலி கொலின்ஸ், ஆடவர் பிரிவில் ஸ்டெப்னோஸ் சிட்சிபாஸ், டானில் மெத்வதேவ் ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். மெல்போர்னில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டி ஒன்றில் போலாந்து வீராங்கனை இகா ஸ்வியடெக்(20வயது, 9வது ரேங்க்), எஸ்டோனியா வீராங்கனை கய்யா கனெபி(36வயது, 115வது ரேங்க்) ஆகியோர் மோதினர். முதல் செட்டை 64நிமிடங்கள் போராடி கனெபி 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். தொடர்ந்து 69நிமிடங்கள் டை பிரேக்கர் வரை நீண்ட 2வது செட்டை ஸ்வியடெக் 7-6(7-2) என்று கடுமையாக போராடி வென்றார்.

தொடர்ந்து 3வது செட்டையும் 48நிமிடங்களில் 6-3 என்ற கணக்கில் ஸ்வியடெக் தனதாக்கினார். அதனால் 3 மணி ஒரு நிமிடம் நடந்த ஆட்டத்தை 2-1 என்ற கணக்கில் வென்ற ஸ்வியடெக்  முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை டேனியலி கொலின்ஸ்(28வயது, 30ரேங்க்) ஒரு மணி 28 நிமிடங்களில் 7-5, 6-1 என நேர் செட்களில் பிரான்ஸ் வீராங்கனை ஆலிஸ் கார்னெட்டை(32வயது, 61வது ரேங்க்) வீழ்த்தி 2வது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தார்.

ஆடவர் பிரிவு காலிறுதியில் நேற்று  இத்தாலி வீரர் ஜானிக் சின்னர்(20வயது, 10வது ரேங்க்), கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்(23வயது, 4வது ரேங்க்) உடன் மோதினர். சுமார் 2 மணி 6நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் சிட்சிபாஸ் 6-3, 6-4, 6-2 என நேர் செட்களில் வென்று 3வது தடவையாக அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். மேலும் ஒரு காலிறுதியில்  கனடா வீரர்  பெலிக்ஸ் அகுர்(21வயது, 9வது ரேங்க்), ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ்(25வயது, 2வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். மெத்வதேவ் எளிதில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெலிக்ஸ் கடும் சவாலை தந்தார். அதனால் 4 மணி 42நிமிடங்கள் வரை  மாரத்தான் போல் நீண்ட ஆட்டத்தில் மெத்வதேவ் 6-7(4-7), 3-6, 7-6(7-2), 7-5, 6-4 என்ற செட்கணக்கில் போராடி வென்று, தொடர்ந்து 2வது முறையாக அரையிறுதியில் விளையாட உள்ளார்.

Tags : Swedech ,Danielle ,Aussie Open ,Medvedev , Swedech, Danielle in the semifinals of the Aussie Open Tennis: Medvedev wins the fight
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலின்ஸ் சாம்பியன்