×

குலாம் நபி ஆசாத்துக்கு பத்ம பூஷண் ஒன்றிய அரசால் காங்.கில் குழப்பம்: ஜெய்ராம் ரமேஷ் - கபில் சிபல் மோதல்

புதுடெல்லி: ‘குலாம் நபி ஆசாத்தின் பங்களிப்பை நாடு அங்கீகரித்த போதிலும் அவரின் சேவை காங்கிரசுக்கு தேவை இல்லை என தெரிகிறது’ என முன்னாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். காங்கிரசில் தலைவர் பதவி உட்பட அனைத்துக்கு பதவிக்கும் தேர்தல் நடத்தும்படியும், கட்சியை அமைப்பு ரீதியாக கீழ் மட்டத்தில் இருந்து பலப்படுத்த வேண்டும் என்றும் சோனியாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கடிதம் எழுதிய, இக்கட்சியின் 23 மூத்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் முக்கியமானவர். இவர்கள், ‘ஜி23 குழு’ தலைவர்கள் என அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான பத்ம பூஷண் விருதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோருக்கு வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்தது, காங்கிரசில் குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது.

தனக்கு வழங்கப்பட்ட விருதை  புத்ததேவ் பட்டாச்சார்யா வாங்க மறுத்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ், ‘இந்த விஷயத்தில் புத்ததேவ் ஆசாத் ஆக இருக்க வேண்டும் என விரும்புகிறார். அடிமையாக இருக்க விரும்பவில்லை,’ என மறைமுகமாக குலாம் நபி ஆசாத்தை தாக்கி பேசினார்.   இந்தியில் ஆசாத் என்றால் விடுதலை, குலாம் என்றால் அடிமை என பொருள்படும். குலாம் நபி ஆசாத்தை கிண்டலடிக்கும் விதமாக இவ்வாறு  கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜி23 குழுவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கூறுகையில், ‘பத்ம பூஷண் விருது பெற்ற குலாம் நபி ஆசாத்துக்கு வாழ்த்துகள். பொதுவாழ்க்கையில் அவருடைய பங்களிப்பை பாராட்டி பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரசுக்கு அவரது சேவை  தேவை இல்லை என போல் தெரிகிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.

* குலாம் நபி ஆசாத் மறுப்பு
பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளதால் குலாம் நபி தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து புதிய முடிவு எடுக்கலாம் என்பது உள்பட பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. அவருடைய டிவிட்டர் பக்கத்தில் உள்ள ‘புரொபைல்’ பகுதியிலும் நேற்று சில மாற்றங்கள்  செய்யப்பட்டிருந்தன. இதனால், புதிய அரசியல் முடிவுகளை அவர் விரைவில் எடுக்கக்கூடும் என செய்திகள் வந்தன. ஆனால், இதை மறுத்துள்ள குலாம்நபி ஆசாத், ‘குழப்பங்களை விளைவிக்கும் வகையில் சிலர் என்னை பற்றி தவறான செய்திகளை பரப்புகின்றனர். என்னுடைய டிவிட்டர் புரொபைலில் புதிதாக எதுவும் சேர்க்கப்படவும் இல்லை. அதே போல் எதுவும் நீக்கப்படவில்லை. அது ஏற்கனவே இருந்ததுபோல் தான் தற்போதும் உள்ளது,’ என நேற்று விளக்கம் அளித்தார்.

Tags : Padma Bushan ,Union Government ,Kulam Prophet ,Asat ,Jairam Ramesh ,Kabil ,Sibal , Jailam Ramesh-Kapil Sibal clash
× RELATED நாங்க குறைக்க வலியுறுத்தியும் டீசல்...