பாலாஜி, அன்னமய்யா, மன்யம் உட்பட ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டம் உதயம்: முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி

திருமலை: ஆந்திராவில் புதிதாக பாலாஜி, மன்யம், அன்னமய்யா உட்பட 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தற்போது, 13 மாவட்டங்கள் உள்ளன. இந்நிலையில், ஒவ்வொரு மக்களவை தொகுதியையும் புதிய மாவட்டமாக உருவாக்க முதல்வர் ஜெகன் மோகன் முடிவு செய்தார். இம்மாநிலத்தில் மொத்தம் 25 மக்களவை தொகுதி உள்ளன. இவற்றில் பெரிய பரப்பளவை கொண்ட தொகுதிகள் 2 மாவட்டங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. புதிய மாவட்டங்களை உருவாக்குவது பற்றி காணொலி மூலமாக நேற்றிரவு 8 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், புதிதாக 13 மாவட்டங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

இதன்படி, விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தை மையமாக கொண்டு, ‘மன்யம்’ என்ற மாவட்டமும், விசாகப்பட்டினத்தில் உள்ள படேருவை மையமாக கொண்டு அல்லூரி சீதாராமராஜ் என்ற மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பதியை மையமாக கொண்டு ஸ்ரீபாலாஜி மாவட்டமும், விஜயவாடாவை மையமாக கொண்டு என்.டி.ஆர். மாவட்டமும், ராயச்சோட்டியை மையமாக கொண்டு அன்னமய்யா மாவட்டமும், புட்டபர்த்தியை மையமாக கொண்டு ஸ்ரீசத்யசாய் மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது. அமலாபுரத்தை மையமாக கொண்டு கோணசீமா மாவட்டமும், நரசராவ்பேட்டையை மையமாக கொண்டு பல்நாடு மாவட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

சித்தூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் சந்திரகிரி தொகுதி, திருப்பதியை ஒட்டியுள்ளது.  இது, பாலாஜி மாவட்டத்திலும், திருப்பதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சர்வபள்ளி தொகுதி நெல்லூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளன. மச்சிலிப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பெனமலூர், கன்னவரம் சட்டமன்றத் தொகுதிகள் விஜயவாடா நகரின் ஒரு பகுதியாகும். இவை விஜயவாடாவை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள என்.டி.ஆர். மாவட்டத்திலும், மச்சிலிப்பட்டினத்தை மையமாக கொண்ட கிருஷ்ணா மாவட்டத்திலும் இணைக்கப்பட்டு உள்ளன. புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கான அரசாணை நேற்றே உடனடியாக வௌியிடப்பட்டது.

* புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சில மாவட்டங்களில் 8 சட்டப்பேரவை தொகுதிகளும், சில மாவட்டங்களில் 6 தொகுதிகளும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

* பழங்குடியின மக்கள் நிறைந்த அரக்கு மக்களவைத் தொகுதி 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

* இதில், அல்லூரி சீதாராமராஜ் என்ற பெயரில் உருவாகியுள்ள புதிய மாவட்டத்தில் 3 சட்டப்பேரவை தொகுதிகள் மட்டுமே உள்ளன.  மான்யம் மாவட்டத்தில் 4 தொகுதிகள் மட்டுமே உள்ளன.

* புதிய மாவட்டங்களில் 15 புதிய வருவாய் கோட்டங்கள் இடம் பெறுகின்றன. இதன்மூலம், மாநிலத்தின் மொத்த வருவாய் கோட்டங்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: