×

ஆஸி. ஓபன் டென்னிஸ் அரையிறுதிக்கு முன்னேறினார் நடால்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், டெனிஸ் ஷபோவலாவுக்கு எதிராக 5 செட்கள் கடுமையாகப் போராடி வென்ற ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் இத்தொடரில் 7வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.
கனடாவை சேர்ந்த இளம் வீரர் டெனிஸ் ஷபோவலாவுடன் (22 வயது, 14வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (35 வயது, 6வது ரேங்க்) 6-3, 6-4 என முதல் 2 செட்களையும் கைப்பற்றி முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஷபோவலாவ் 6-4, 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

வயிற்றுப் பகுதியில் தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவதிப்பட்ட நடால் களத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன், கழிப்பறைக்கு சென்று திரும்பியதால் ஆட்டம் தொடர்வதில் தாமதமானது. இதனால் எரிச்சலடைந்த ஷபோவலாவ் நடுவரிடம் கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், பதற்றமின்றி விளையாடி புள்ளிகளைக் குவித்த நடால் 6-3, 6-4, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மெல்போர்னில் அவர் 7வது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்து ரசிகர்களை மகிழ்வித்த இப்போட்டி 4 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. மாரத்தான் போராட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த ஷபோவலாவ், நடுவரை ‘ஊழல்வாதி’ என கடுமையான வார்த்தையில் அர்ச்சனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதற்காக வருத்தம் தெரிவித்த ஷபோவலாவ்,நட்சத்திர வீரர்களுக்கு சாதகமாக  நடுவர்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

பார்டி அசத்தல்: மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் நேற்று களமிறங்கிய நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.) 6-2, 6-0 என நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவை மிக எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 3 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் (26 வயது, 51வது ரேங்க்) 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவாவை (26 வயது, 4வது ரேங்க்) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

சானியா ஜோடி வெளியேற்றம்: கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா - ராஜீவ் ராம் ஜோடி 4-6, 6-7 (5-7) என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஜெய்மி போர்லிஸ் - ஜேசன் குப்லர் ஜோடியிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. இப்போட்டி 1 மணி, 31 நிமிடத்துக்கு நீடித்தது. ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதியுடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய இணை அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.


Tags : Aussie ,Nadal ,Open Tennis , Aussie. Nadal advanced to the semifinals of the Open Tennis
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...