×

தரமற்ற உணவு வழங்கியதாக பொதுமக்கள் புகார் எதிரொலி மாமண்டூர் பயண வழி உணவகத்தில் அரசு பஸ்கள் நின்று செல்ல தடை: அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிரடி

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில், அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் மற்றும் கடைகளில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலை பெறுவதாக பயணிகள் புகார் அளித்துள்ளனர். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட் சொந்தமான ஒப்பந்ததாரர் நடத்தும் மாமண்டூர் பயண வழி உணவகம் மற்றும் கடைகளில் உணவின் தரம் குறைவாகவும், விலைகள் அதிகமாகவும் இருப்பதாக பல்வேறு புகார்கள் பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து, கடந்த மாதம் 29ம் தேதி போக்குவரத்து கழக அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு உணவு சுகாதாரமின்றி, தரமற்றதாக உள்ளது எனவும், அனைத்து உணவுப் பொருட்களும் விற்பனை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, மேற்கண்ட குறைகளை சுட்டிக்காட்டி அதனை நிவர்த்தி செய்து, விவரத்தை தெரிவிக்குமாறு கடந்த மாதம் 31ம் தேதி புகார் அறிக்கை ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது. இதை தொடர்ந்து, மீண்டும் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடந்த 20ம் தேதி போக்குவரத்து கழக அலுவலர்கள் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு தரமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவு வழங்குவது, விற்பனை விலையை விட அதிகம் விற்பனை செய்தது மற்றும் உணவுக் கூடம் சமையலறை, மற்ற வளாகங்கள் சுகாதார சீர்கேடான நிலையில் உள்ளதை கண்டறிந்து 21ம் தேதி மீண்டும் புகார் அறிக்கையை அதே நிறுவன ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் 25ம் தேதி அன்று விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநர் தலைமையில், அலுவலர்கள் ஆய்வு மேற்கண்ட போது, அந்த உணவகம் குறைபாடுகள் ஏதும் சரி செய்யாத நிலை கண்டறியப்பட்டதால், அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகள் 25ம் தேதி (நேற்று) காலை முதல் மாமண்டூர் சாலை வழி உணவகத்தில் நின்று செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், உடனடியாக மேற்கண்ட ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்து தரமான உணவு வழங்கும் ஒப்பந்ததாரரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள் நின்று செல்லும் பயண வழி உணவகங்கள் அனைத்திலும் ஆய்வுக`ள் நடத்தப்படும். தரம் குறைவான உணவு மற்றும் கூடுதல் விலைக்கு வழங்கும் உணவகங்களின் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, தரமான உணவு மற்றும் குறைந்த விலையில் உணவு வழங்கும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

Tags : Mamandur ,Minister ,Rajakannapan , Echoes of public outcry over substandard food: Government buses banned from stopping at Mamandur route: Minister Rajakannapan
× RELATED மதுராந்தகம் ஒன்றியத்தில்...