×

தமிழக சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுக எம்எல்ஏ ஒருவரை கூட பார்க்கவில்லை: பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தஞ்சை மாணவி லாவண்யா மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக பாஜ சார்பாக உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. உண்ணாவிரத போராட்டத்தில் மாநில துணை தலைவரும், சட்டமன்ற பாஜ தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சி காலம் இன்னும் 4 ஆண்டுகள் உள்ளது. எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் நேரத்தில் எப்படி ஒரு எழுச்சி இருந்ததோ அதே எழுச்சி தற்போது அண்ணாமலை தலைவராக உள்ள இந்த நேரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தின் எதிர்கட்சி போல மக்கள் பிரச்னைகளை பாஜதான் பேசி வருகிறது. சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக ஆண்மையோடு பேச கூடிய ஒரு அதிமுக எம்எல்ஏவைக் கூட பார்க்க முடியவில்லை. நீங்கள் பேச வேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். 4 பேர் உள்ள நாங்கள் எப்படி பேச முடியும்.

எதிர்கட்சியாக இல்லாமல் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே. அதேபோல நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரண்டு தவறுகளை இழைத்த காரணத்தால் ஆட்சி அமைக்க முடியாமல் சென்றது. இல்லை என்றால் பாஜ தயவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கும். மேலும் இந்த தோல்வியும் நல்லதுதான். வரும் காலங்களில் பாஜ தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். பொதுவாக நான் மிகவும் அமைதியானவன். லாவண்யா மரணத்தில் தஞ்சாவூர் காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கையை கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

அதிமுக கூட்டணியில்தான் பாஜ உள்ளது. அதிமுகவில் அமைச்சராக இருந்தவர்தான் நயினார் நாகேந்திரன். தற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோது நயினார் நாகேந்திரனும் அமைச்சராக இருந்தார். தற்போது பாஜவில் சேர்ந்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன், ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுக எம்எல்ஏக்கள் இல்லை என்று கடும் தாக்குதல் தொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : MLA ,Tamil Assembly ,Baja Assembly ,Nayanar Nagendran , I have not seen an AIADMK MLA who can speak masculinely in the Tamil Nadu Assembly: BJP Assembly Party Leader Nayyar Nagendran
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...