×

பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்காமல் எதிர்கட்சி தலைவர்கள் ஒடுங்கி இருப்பது ஏன்?... 5 மாநில தேர்தல்களில் ஒருமித்த கருத்து இல்லாததால் சலசலப்பு

புதுடெல்லி: பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்காமல் எதிர்கட்சி தலைவர்கள் மாநிலத்திற்குள் ஒடுங்கி உள்ளனர். இதனால் 5 மாநில தேர்தல்களில் பாஜகவுக்கு எதிரான ஒருமித்த கருத்து எடுக்க முடியாமல் எதிர்கட்சிகள் தடுமாறி வருகின்றன. மேலும், அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம் நடந்த மேற்குவங்க சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பாஜகவின் அசுர பிரசாரத்தை வீழ்த்தி மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார். பிரதமர் மோடி, உள்துறை அமித் ஷா போன்றவர்களின் படைகள் மம்தாவின் பிரசாரத்திற்கு முன்னால் எடுபடவில்லை. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டே பிரசாரம் செய்து வெற்றிப் பெற்றார்.

எத்தனையோ கட்டுக்கதையை உடைத்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றினார். பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் போராடி வென்றார். இந்த உத்வேகத்தை இன்றைய எதிர்க்கட்சிகளால் பின்பற்ற முடியவில்லை. எதிர்கட்சிகள் தங்களுக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தும், ஈகோவைக் கைவிட்டால் மட்டுமே பாஜகவை வீழ்த்த முடியும் என்று அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அந்த வகையில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஐந்தாவது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டில் மோடி தனது டெல்லி இன்னிங்ஸைத் (பிரதமர்) தொடங்கியபோது ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களை ஆளும் பிஜு ஜனதா தளம் வென்றது. ஆனால் 2019ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 12 இடங்களில் மட்டுமே பிஜூ ஜனதா தளம் வென்றது. பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். கடந்த மக்களவைத் தேர்தலில், அவரது கட்சியில் 33 சதவீத சீட்டுகள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது மற்றும் தனிநபர் வருமானமும் அதிகரித்துள்ளது, ஆனால் ஒடிசாவின் பல பகுதிகள் இன்றும் கடுமையான வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இருந்தும் நவீன் பட்நாயக், தனது அரசியல் வாழ்க்கையை ஒடிசாவிற்குள் கட்டுப்படுத்திக் கொண்டார். அதேபோல் ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி, தெலங்கானாவின் சந்திரசேகர் ராவ் போன்ற தலைவர்கள் வலுவான எதிர்கட்சியாக இருந்தாலும் கூட, இவர்களில் யாரும் தேசிய தலைவர்களாக உருவெடுக்கவில்லை. அதேபோல் நான்கு முறை மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஒன்றிய அரசின் பாதுகாப்பு மற்றும் விவசாயத் துறை அமைச்சராக இருந்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் இருந்தே தனது அரசியல் அனுபவம் கொண்டவர்.

ஆனால் அவரது அரசியல் வாழ்க்கையில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் தலைவராக அல்லாமல், கிங் மேக்கராக மட்டுமே செயல்பட்டு வருகிறார். அடுத்ததாக உத்தரபிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தனது தந்தை முலாயம் சிங்கின் நிழலில் இருந்தே அரசியல் செய்ய விரும்புகிறார். ஆனால் தற்போது உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சவால் விடுக்கும் வகையில் பாஜகவின் மூன்று அமைச்சர்கள், ஒரு டஜன் எம்எல்ஏக்களை தனது கட்சிக்குள் வளைத்து போட்டார். இது பாஜகவுக்கு பெரும் அடியாக இருந்தாலும், அகிலேஷின் தம்பியின் மனைவி அபர்ணா யாதவ், சமீபத்தில் பாஜகவில் இணைந்தது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வரும் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வெற்றியை பொருத்தே 2024ம் ஆண்டு நடக்கும் மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவின் பங்கு என்ன என்பது தெரியவரும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி, வழக்கத்திற்கு மாறாக உத்தரபிரதேச தேர்தலில் மிகவும் அடக்கி வாசிக்கிறார். அவர் மீதான ஊழல் வழக்குகள் காரணமாக இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. தலைநகர் டெல்லியின் உண்மையான நிர்வாகத் தலைவராக ஆளுநர் இருந்தாலும், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். மக்களை மையமாகக் கொண்ட அரசியல் கொள்கையில் நம்பிக்கை கொண்ட அவர், பாஜகவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுவதாகவும் கூறப்படுகிறது.

இவரது ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பில் இந்த தேர்தலில் முக்கிய இடத்தை வகிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. கிட்டத்தட்ட 136 ஆண்டுகள் பழமையான இந்திய தேசிய காங்கிரஸ் தற்போது மூன்று மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. மூன்று மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பங்கு வகிக்கிறது. ஆனால் தேசிய அளவில் 20 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. தேசிய அளவில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் மோடிக்கு அடுத்த இரண்டாவது விருப்பமான தலைவராக ராகுல் காந்தியின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி மீதான கடுமையான தாக்குதல்களும், தீவிரமான தேர்தல் பிரசாரங்களும் அவரது கட்சிக்கு உதவவில்லை.

மேற்குவங்கம் மற்றும் டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியத்தைப் பெற்றதோடு, 2019ல் நடந்த மக்களவை தேர்தலின் போது உத்தரப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது உத்தரபிரதேச தேர்தலில் எத்தனை இடங்களை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு தேசிய கவனத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து மூத்த அரசியல் நிபுணர்கள் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியை பொருத்தமட்டில் பந்தயத்தில் வெற்றி பெறும் குதிரை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்திய ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்க்கட்சி தேவை. வெறும் கனவுகளால் எதுவும் நடந்துவிடாது. இதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

பாஜகவுக்கு மாற்றாக நம்பகமான தலைவர்களை கொண்டிருக்க வேண்டும். இயற்கையாகவே முதிர்ந்த, அனுபவம் வாய்ந்த, கற்பனைத்திறன், வியூகங்களை வகுக்கும் தலைவர் தேவை. தற்போது நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல்களில் கூட, எதிர்கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து செயல்படவில்லை. அவர்களுக்குள் கருத்து மோதல்களும் அதிகரித்துள்ளன. நாடாளுமன்றத்தில் கூச்சலிடும் அவர்கள், தேர்தல் பாதையில் ஒதுங்கியே உள்ளனர். இவ்வாறாக சென்றால் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவது கடினமாகிவிடும்’ என்று கூறினர்.

Tags : Bajaka , Why are the Opposition leaders shrinking without forming a strong alliance against the BJP? ... 5 state elections
× RELATED முன்னாள் ஒன்றிய அமைச்சரும், மூத்த...