×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் அசரென்கா: சபெலென்கா வெளியேற்றம்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முந்தைய சுற்றில் விளையாட, பெலாரஸ் நட்சத்திரம் விக்டோரியா அசரென்கா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் (26 வயது, 24வது ரேங்க்) நேற்று மோதிய அசரென்கா (31 வயது, 16வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 10 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 3வது சுற்றில் களமிறங்கிய 3வது ரேங்க் வீராங்கனை அரினா சபெலென்கா (23 வயது, பெலாரஸ்) 4-6, 6-2, 0-6 என்ற செட் கணக்கில் ரஷ்யாவின் அனஸ்டேசியா பாவ்லியுசென்கோவாவிடம் (31 வயது, 32வது ரேங்க்) அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் எலனா ரிபாகினா (கஜகஸ்தான்), தாமரா ஜிடான்செக் (ஸ்லோவேனியா) ஆகியோரும் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.கேஸ்பர் ஏமாற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நேற்று களமிறங்கிய நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (22 வயது, 16வது ரேங்க்), ஸ்பெயினின் அலெஜாண்ட்ரோ டேவிடோவிச் போக்கினாவுடன் (21 வயது, 46வது ரேங்க்) மோதினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை போக்கினா 7-6 (7-3) என கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி போக்கினாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த கேஸ்பர் 6-2 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. கடும் போராட்டமாக அமைந்த 3வது செட்டில் போக்கினா 7-6 (8-6) என டை பிரேக்கரில் வென்று முன்னிலை வகிக்க, 4வது செட்டை கேஸ்பர் 6-0 என கைப்பற்றி மீண்டும் சமநிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து 5வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 4 மணி, 35 நிமிடத்துக்கு நீடித்த இப்போட்டியில் டேவிடோவிச் போக்கினா 7-6 (7-3), 2-6, 7-6 (8-6), 0-6, 7-5 என போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.மற்றொரு 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (24 வயது, 6வது ரேங்க்) 6-2, 7-5, 6-2 என நேர் செட்களில் செர்பிய வீரர் லாஸ்லோ ஜெரியை (26 வயது, 55வது ரேங்க்) வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். பாக்னினி அவுட்: இத்தாலி வீரர் பேபியோ பாக்னினி தனது 3வது சுற்றில் 4-6, 1-6, 3-6 என்ற நேர் செட்களில் அர்ஜென்டினாவின் டெல்போனிசிடம் தோற்று வெளியேறினார். ஜப்பானின் கெய் நிஷிகோரியுடன் மோதிய சுவிஸ் வீரர் ஹென்றி லாக்சோனன் முதல் செட்டில் 5-7 என தோற்று பின்தங்கிய நிலையில் காயம் காரணமாக விலகினார். இதையடுத்து, நிஷிகோரி 4வது சுற்றுக்குள் நுழைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் களமிறங்கிய செக் குடியரசு சகோதரிகள் கரோலினா பிளிஸ்கோவா – கிறிஸ்டினா பிளிஸ்கோவா ஜோடி 6-7 (6-8), 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சீனாவின் யிபான் ஸூ – ஷுவாய் ஸாங் ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது….

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் அசரென்கா: சபெலென்கா வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Azarenka ,French Open Tennis ,Sabellenka ,Paris ,French Open Grand Slam tennis ,Dinakaran ,
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் ஜெஸிகா பெகுலா