வெள்ளத்தில் மிதக்கும் வீடு தொழில்நுட்பம் கண்டுபிடித்த விருதுநகர் சிறுமிக்கு பால புரஸ்கார் விருது: காணொலி காட்சி மூலம் பிரதமர் வழங்கினார்

விருதுநகர்: ஒன்றிய அரசால் கலை, கல்வி, கலாச்சாரம், புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. விருதுநகரை சேர்ந்த டாக்டர் தம்பதி நரேஷ்குமார் - சித்ரகலாவின் மகள் விஷாலினி. 2ம் வகுப்பு மாணவி. இவர் வெள்ளத்தில் மிதக்கும் தானியங்கி வசதியுடன் கூடிய வீட்டிற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் வெள்ள பேரிடர் காலங்களில் மக்கள் தண்ணீரில் மூழ்காமல் தங்களை தற்காத்து கொள்ள முடியும். இதற்கான இளைய காப்புரிமை இந்திய அரசால் விஷாலினிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பை பாராட்டி ஒன்றிய அரசு, பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதை அறிவித்தது. நேற்று நடைபெற்ற விழாவில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி, விஷாலினிக்கு இவ்விருது மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகையை வழங்கி பாராட்டினார். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் மேகநாதரெட்டி, சிறுமியின் தந்தை டாக்டர் நரேஷ்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சிறுமி விஷாலினி கூறுகையில், ‘‘டிவியில் வெள்ளத்தை பார்த்தபோது பாதிக்கப்படும் மக்களுக்கு வெள்ளத்தில் மிதக்கும் உயிர் காக்கும் வீட்டை ஏன் உருவாக்க கூடாது என முயற்சி செய்து உருவாக்கினேன். எதிர்காலத்தில் கலெக்டராக வேண்டும் என்பதே லட்சியம்’’ என்றார்.

Related Stories: