×

ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர் முத்தம் கொடுத்த வழக்கில் நடிகை ஷில்பா விடுவிப்பு: மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மும்பை: ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், நடிகை ஷில்பா ஷெட்டியை முத்தம் கொடுத்த வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், இவ்வழக்கில் இருந்து ஷில்பா ஷெட்டியை விடுவித்தது. கடந்த 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் நடந்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கேர், நடிகை ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழா மேடையில் நின்று கொண்டிருந்த ரிச்சர்ட் கேர், யாருமே எதிர்பார்க்காத வகையில் ஷில்பாவை இருக்கி அணைத்து நச்சென்று ஒரு முத்தம் கொடுத்தார். அதிர்ச்சியடைந்த ஷில்பா, தனக்கு கொடுத்த முத்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடி வாங்கிக் கொண்டார். இந்த சம்பவத்திற்கு பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட ஷில்பாவுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. வழக்குகளும் தொடரப்பட்டன. பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் கேதகி சவான் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாஜிஸ்திரேட் அளித்த உத்தரவில், ‘இந்த வழக்கில் முக்கிய  குற்றவாளியான ரிச்சர்ட் கேரின் செயலால் ஷில்பா ஷெட்டி பாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருந்தும் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பார்த்தால் ஷில்பா ஷெட்டிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றே தெரிகிறது.

எனவே, அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ஷில்பா ஷெட்டி மற்றும் ரிச்சர்ட் கேர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி ராஜஸ்தானின் முண்டவாரில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 292, 293, 294 (ஆபாசம்) மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவம் செய்தல் தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. இந்த வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று ஷில்பா ஷெட்டி கடந்த 2017ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அதன்படி இவ்வழக்கு மும்பை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

Tags : Shilpa ,Mumbai ,Richard Care , Actress Shilpa acquitted in Hollywood actor Richard Care's kissing case: Mumbai court
× RELATED சிங்கப்பெண்ணே விமர்சனம்…