225 பறவைகள் உள்பட சேலம் வன கோட்டத்தில் 147 பட்டாம் பூச்சி இனம்-கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

சேலம் : சேலம் வன கோட்டத்தில் நடந்த கணக்கெடுப்பில், 225 பறவைகள் மற்றும் 147 பட்டாம்பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கவுதம் தெரிவித்துள்ளார். சேலத்தை தலைமையிடமாக கொண்டு, செயல்பட்டு வரும் சேலம் வனக்கோட்டம், மிகவும் பழமை வாய்ந்த வனக்கோட்டமாக திகழ்ந்து வருகிறது. தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாக கொண்டு சேலம் வனக்கோட்டம் அமைந்துள்ளது.

மாவட்டத்தில் சேர்வராயன் மலை, ஜருகுமலை, பச்சமலை, கல்ராயன் மலை, கோதுமலை, பாலமலை, நகரமலை, கஞ்சமலை என பல மலைகள் மற்றும் குன்றுகள் உள்ளன. அத்துடன் காவேரி, சுவேதா நதி, சரபங்கா நதி, வெள்ளாறு, வசிஷ்ட நதி, ஆணைமடுவு ஆறு, திருமணி முத்தாறு, காட்டாறு, கோமுகி நதி என சிறு, சிறு ஓடைகள் மற்றும் ஆறுகள் நீர் ஆதாரமாக இருக்கின்றன. வனப்பகுதிகளில் உள்ள விலங்குகள், பறவையினங்கள் குறித்து வனத்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2021ம் ஆண்டிற்கான கணக்கெடுப்பு பணிகள் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இதில், சேலம் வனக்கோட்டத்தில் 225 பறவையினங்களும், 147 பட்டாம்பூச்சி இனங்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் யானை, காட்டுமாடு, கரடி, மான், முள்ளம்பன்றி, உடும்பு, காட்டுப்பன்றி, குரங்குகள், மலைப்பாம்பு, மயில் உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் மற்றும் பல்வேறு பறவையினங்கள் வசித்து வருகின்றன. சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, தம்மம்பட்டி, கல்வராயன் ஆகிய 9 வனச்சரகங்களில் கடந்த டிசம்பர் 17, 18 மற்றும் 19ம் தேதிகளில், 2021ம் ஆண்டிற்கான பறவைகள் மற்றும் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. உதவி வனப் பாதுகாவலர்கள், வனச்சரக அலுவலர்கள் என 40 வனப்பணியாளர்கள் அடங்கிய குழுவினரும், 83 நபர்கள் அடங்கிய சேலம் இயற்கை குழுவினரும், 16 குழுக்களாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதன் முடிவில் சேலம் மாவட்ட வனங்களில் 225 வகையான பறவையினங்கள் உள்ளது தெரியவந்துள்ளது. இதில் சேலத்தை வாழிடமாக கொண்ட 175 இனங்களும், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் வாழும் 49 இனங்களும் அடங்கும். இதுதவிர, தெற்காசிய நாடுகளில் வாழும், ஆரஞ்ச் பிரெஸ்டட் கிரீன் பிஜென்  என்ற புதிய வகை பறவையினமும் கண்டறியப்பட்டது. ஜாேடியாகவும், சிறு கூட்டங்களாவும் வாழ்ந்து பழ வகைகளை உண்ணக்கூடிய இவை, சேர்வராயன் மலை அடிவாரப் பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் பட்டாம் பூச்சிகள் கணக்கெடுப்பில், 147 வகையான பட்டாம்பூச்சி கண்டறியப்பட்டது. இதில் 146 இனங்கள், சேலம் மாவட்டத்தில் வாழக்கூடியவை. அத்துடன், இமயமலை, சீனா, நேபாளம், இந்தோனேசியா, பாகிஸ்தான், மியான்மர், சிக்கிம், பூட்டான் உள்ளிட்ட நாடுகளில் வாழும் இனமான ‘இந்தியன் கேப்பேஜ் வைட்’ என்ற புதிய வகை பட்டாம்பூச்சியும் கண்டறியப்பட்டது. இவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,000 முதல் 11,000 அடி உயரத்தில் வசிக்கும் இனமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: