×

நெல் தரிசில் உளுந்து சாகுபடி தொழில்நுட்பம்-வேளாண் இணை இயக்குநர் ஆலோசனை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராம.சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தற்போது சம்பா சாகுபடி முதிர்ச்சி மற்றும் அறுவடை பருவத்தில் உள்ளது. ஆகையால் நெல் அறுவடைக்குப் பின்னர் உளுந்து சாகுபடி செய்திட உகந்த பருவமாகும். மிகக்குறைவான வயதுடைய பயறுவகை பயிரான உளுந்து 65 - 70 நாட்களில் பலன் தரக்கூடியது. உளுந்து சாகுபடிக்குத் தேவையான நீரின் அளவும் மிக குறைவு, அதாவது 350 மி.மீ போதுமானது. நுண்ணீர் பாசன முறையில் சொட்டுநீர் அல்லது தெளிப்புநீர்ப் பாசனம் அமைத்து நீர் சிக்கனத்தை கடைப்பிடித்து கூடுதல் பரப்பில் சாகுபடி செய்வதனால் குறைவான நீரில் உணவு உற்பத்தியினை அதிகரிக்கலாம். உளுந்து சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம்.

தற்போது, சாகுபடி செய்ய வம்பன் 6, வம்பன் 8 மற்றும் வம்பன் 10 சிறந்த ரகங்கள் ஆகும். மாவட்டத்திலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உளுந்து விதைகள் 11.15 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. உளுந்து சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதைகளுடன் உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா தலா ஒரு பொட்டலம் அல்லது திரவ ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா தலா 50 மிலியினை தேவையான ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து வரிசைக்கு வரிசை 30 செ.மீ இடைவெளியும் செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் மகசூலுக்கு பூக்கும் தருணத்தில் 2 சத டிஏபி கரைசல் அல்லது ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் நுண்ணூட்டம் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கலாம். அது மட்டுமல்லாமல் உளுந்துப் பயிரானது விண்ணில் உள்ள தழைச்சத்தினை வேர் முடிச்சுகளில் சேமிக்கின்றது. இதனால் மண்வளம் மேம்படுகிறது. இதுதொடர்ந்து மேற்கொள்ளப்படும் பயிர்களுக்கு நல்ல பலனை கொடுக்கிறது. உளுந்து சாகுபடியில் அறுவடைக்கு பின் பெறப்படும் உளுந்து செடி கால்நடைகளுக்கு மிக சிறந்த புரத உணவாகும்.

இதனை சேமித்து வைத்து கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுத்தலாம். உளுந்து சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நுண்ணீர் பாசன முறையான சொட்டுநீர், மழைத்தூவான் அல்லது தெளிப்பு நீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்துவதால் நீர்த் தேவையினைப் பெருமளவு குறைக்கலாம்.எனவே புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து அல்லது பாசிப்பயறு சாகுபடி செய்து குறைவான நீரில் குறைவான நாட்களில் அதிகப்படியான மகசூல் பெற்று பயனடையுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Tags : Paddy Barley Cultivation Technology-Agriculture , Pudukottai: Pudukottai District Joint Director of Agriculture Rama Sivakumar has issued a press release: Samba cultivation is now mature
× RELATED சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!