குளித்தலை கடம்பர் கோயில் எதிரே இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலம்-சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

குளித்தலை : குளித்லை கடம்பர் கோயில் எதிரே இடிந்து விழும் நிலையிலான தென்கரை வாய்க்கால் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பர் கோயில் எதிரே 1926ம் ஆண்டு ஆங்கிலேயர்ஆட்சி காலத்தில் தென்கரை வாய்க்கால் பாலம் கட்டப்பட்டது. ஒரு காலகட்டத்தில் குளித்தலை முசிறி பெரியார் பாலம் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கட்டுமான பொருட்கள் அனைத்தும் இந்த தென்கரை வாய்க்கால் பாலம் வழியாக தான் எடுத்து சென்றனர். பல வருடங்களுக்கு முன்பு திருச்சி கரூர் புறவழிச்சாலை போடப்பட்டது.

இதனால் நகரின் மைய பகுதியாக கடம்பூர் கோயில் பகுதி அமைந்திருப்பதால் கரூரிலிருந்து திருச்சியிலிருந்து குளித்தலை நகருக்குள் வரும் வாகனங்கள் இந்த தென்கரை வாய்க்கால் பாலம் வழியாகத்தான் வந்து செல்கிறது. மேலும் குளித்தலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோயில்களில் திருவிழாக்காலங்களில் காவிரி கடம்பன் துறையிலிருந்து தீர்த்த குடம் பால்குடம் காவடி அக்கினி சட்டி எடுத்துக்கொண்டு இந்த பாலத்தின் வழியாகத்தான் வரவேண்டும் நிலை இருந்து வருகிறது. மேலும் தைப்பூச தினத்தன்று எட்டு ஊர் சுவாமிகள் சந்திப்பு கொடுத்து தீர்த்தவாரி நடைபெறும் இடத்திற்கு அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளை இந்த பாலம் வழியாக தான் பக்தர்கள் எடுத்துச் செல்வார்கள். அப்பொழுது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

ஒரு சில நேரங்களில் கனரக வாகனங்கள் இப்பாலத்தை கடந்து சென்றன அப்பொழுது அப்பகுதி பொதுமக்கள் இந்த பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது கனரக வாகனங்கள் செல்வதினால் பாலம் பழுதாகி இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டு விடும் அதனால் செல்ல வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தினர். இப்பொழுது எந்த ஒரு கனரக வாகனங்களும் இந்த தென்கரை வாய்க்கால் பாலம் வழியாக வருவதில்லை.

தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர் கார் வேன் இருசக்கர வாகனங்கள் வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் பாலத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படுவது முன் இந்த தென்கரை வாய்க்கால் பாலத்தை புதிதாக கட்ட நடவடிக்கை வேண்டும் என ஆற்று பாதுகாப்பு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: