×

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடை பணிகள் தீவிரம்-நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுகா பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் 1.68 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நடவு மற்றும் நேரடி விதைப்பின் மூலம் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையாலும் அதனைத் தொடர்ந்து ஆண்டின் இறுதியில் பெய்த அதீத கனமழையால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டது. மழைநீரில் மூழ்கிய பயிர்கள் சில இடங்களில் முளைக்கத் தொடங்கியது. இதனையடுத்து தண்ணீர் வடிந்தவுடன் விவசாயிகள் எஞ்சிய பயிர்களை அறுவடை செய்யும் பணியைத் துவங்கினர்.

மழையால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பயிர்கள் அறுவடை செய்யப்பட்ட இந்நிலையில் தற்போது மயிலாடுதுறை அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணல்மேடு, காளி, திருமங்கலம், ஆனதாண்டவபுரம், ஆகிய பகுதிகளில் முழுவதுமாகவே சம்பா சாகுபடி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. இதனால் அறுவடை செய்த நெற்பயிர்களை வீடுகளிலேயே பாதுகாக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சம்பா சாகுபடி அறுவடை பணிகள் துவங்கும் காலங்களில் மாவட்டம் முழுவதும் 155 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கொள்முதல் நிலையங்களுக்கு பணியாளர்கள் தேர்வு இதுவரை நடைபெறாததால் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே விரைவாக பணியாளர்களை தேர்வு செய்து மாவட்டத்தில் 4 தாலுகாவிலுள்ள அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Mayiladuthurai district , Mayiladuthurai: In Mayiladuthurai district, Mayiladuthurai, Sirkazhi, Tharangambadi and Kuthalam 4 taluka areas have 1.68 samba and sorghum crops.
× RELATED மயிலாடுதுறை அருகே பாத்ரூமில் பதுக்கி...