திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து-மனுக்களுடன் வந்த பொதுமக்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மனு அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.எனவே, தங்களுடைய ேகாரிக்கை மனுக்களை இணையதளம் மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்கலாம். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவல் தீவிரம் குறைந்த பிறகு, நேரடியாக மனுக்கள் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது தெரியாமல், நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனுக்களுடன் வந்தனர். ஆனால், அவர்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை பெறவில்லை. மேலும், கோரிக்கை மனுக்களை செலுத்துவதற்காக அலுவலகத்தின் வெளியே பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில், மனுக்களை செலுத்துமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, மனுக்களுடன் வந்த பொதுமக்கள் பெட்டியில் மனுக்களை செலுத்திவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த சு.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுடைய கிராமத்தில் நூறு நாள் வேலை முறையாக வழங்குவதில்லை, குறைந்த கூலி வழங்கப்படுகிறது என புகார் மனு அளிக்க வந்தனர்.மேலும், தங்களுடைய கிராமத்தில் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும், மயான பாதை வசதியின்றி தவிப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தனர்.

அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளிக்க நீண்ட நேரம் காத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் மனுக்களை பெறவில்லை. எனவே, தங்களுடய கோரிக்கை மனுவை அங்கிருந்த பெட்டியில் செலுத்திவிட்டு சென்றனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடைகளை மூட உத்தரவு

கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பதால், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் செயல்பட்டு வந்த சிறுதானிய உணவகம், பாரம்பரிய உணவகம், ஆவின் பாலகம், ஜெராக்ஸ் கடை ஆகியவற்றை தற்காலிகமாக மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த அனைத்து கடைகளும் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன. சமூக இடைவெளியை பின்பற்றாமல் கடைகளில் கூட்டம் கூடுவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: