×

இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை.. தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் : தமிழக அரசு திட்டவட்டம்!!

சென்னை : இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை என்றும் அதே சமயம் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிய தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கோரி கடலூரைச் சேர்ந்த ஆலமரம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், எந்த மொழியை கற்க வேண்டும் என்பது பற்றி மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்ற போதிலும் இந்தி படிக்கக் கூடிய வாய்ப்பு இல்லாமல் தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது. இந்தி தெரியவில்லை என்றால் வேறு மாநிலங்களில் பணியாற்ற செல்வோருக்கு சிக்கல் ஏற்படும். ஆகவே மக்கள் நலன் கருதி முடிவு எடுக்க வேண்டும், என்று தெரிவித்தனர். மேலும் மும்மொழி கொள்கையை பின்பற்றுவதில் என்ன சிரமம் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கர்நாடகா, ஆந்திராவிலும் மும்மொழி கொள்கை பின்பற்றப்படுகிறது என்றும் கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது
என்றும் கருத்து தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து ஆஜரான தமிழக அரசு வழக்கறிஞர், இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை. அதே சமயம் தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்பது அரசின் கொள்கை முடிவு, என்றும் கூறினார். இதையடுத்து இந்த மனனுவுக்கு 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.


Tags : Tamil ,Nadu , இரு மொழிக் கொள்கை,இந்தி
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...