திருப்போரூர் - நெம்மேலி சாலை விரிவாக்கம்: அகலப்படுத்த அளவிடும் பணிகள் தொடக்கம்

திருப்போரூர்: திருப்போரூர் - நெம்மேலி சாலையை விரிவாக்கம் செய்வதற்காக, அச்சாலையை அகலப்படுத்துவதற்கான அளவீடு பணிகள் தொடங்கப்பட்டது. பழைய மாமல்லபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் வகையில் திருப்போரூர் - நெம்மேலி இடையே 3 கிமீ தூர சாலை உள்ளது. இந்த சாலையில் பக்கிங்காம் கால்வாயும், அதன் மீது உயர் மட்டப் பாலமும் அமைந்துள்ளது. இச்சாலை கிழக்கு கடற்கரை சாலையுடன் இணையும் இடத்தில் சம தளத்தில் இல்லாமல் வழக்கத்தை விட 8 மீட்டர் உயரமாக உள்ளது. இதனால் சரிவான சாலைப்பகுதியில் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை அடைவதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து சில மாதங்களுக்கு முன் தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில், சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் சாலை அகலப்படுத்தும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தொடர்ந்து புதிதாக திமுக ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் இச்சாலைப்பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 300 மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்த திட்டமிட்டு, சாலையின் இரு பக்கங்களிலும் தலா 15 மீட்டர் அகலத்துக்கு நிலத்தை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாலையை அகலப்படுத்துவதற்காக, அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அளவீட்டு அறிக்கையும், கையகப்படுத்த வேண்டிய மனைகள், நிலங்களின் அளவுகள், அரசின் இழப்பீட்டு தொகை ஆகியவற்றின் அறிக்கை தயாரானவுடன் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யும். அதன் பிறகு இணைப்பு சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் கிழக்கு கடற்கரை சாலையுடன் இணையும் இடத்தில் உள்ள சரிவான பாதை சமதளத்துக்கு மாறும். வாகனங்கள் எவ்வித சிரமமும் இன்றி சாலையை அடைந்து பயணிக்க முடியும் என அதிகாரிகள் கூறினர்.

Related Stories: