×

ஆர்டிபிசிஆர் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத பிஏ.2; வரும் நாட்களில் 3வது அலை மிக தீவிரமடையும்: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: நாட்டில் இனிவரும் நாட்களில் ஒமிக்ரான் 3வது அலை பரவல் மிகுந்த தீவிரமடைய கூடும். ஒமிக்ரான் தொற்றினால் பாதித்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆர்டிபிசிஆர் பரி சோதனையிலும் பிஏ.2 வைரசை கண்டுபிடிக்க முடியவில்லை.

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வகை வைரஸ் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கி உள்ளது. இந்தியாவில் கொரோனா 3வது அலை ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒமிக்ரான் வைரசே காரணமாகும். இதனால் தினசரி தொற்று பாதிப்பு 3 லட்சத்துக்கும் மேல் கடந்துள்ளது.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தற்போது சமூக பரவல் கட்டத்தை எட்டியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் மரபணு வரிசைப்படுத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள பிஏ.2 வகை புதிய மரபணு மாறுபாடு வைரசே இந்தியாவில் பெரும்பாலானோருக்கு தொற்றி உள்ளது. இதை ஆர்டிபிசிஆர் பரி சோதனையிலும் கண்டறிய முடியவில்லை.  இது இந்தியா, ஸ்வீடன், டென்மார்க் உள்பட 40 நாடுகளில் இது பரவி உள்ளது.

இந்நிலையில், ஒமிக்ரான் சமூக பரவல் கட்டத்தை அடைந்துள்ளதால், வரும் நாட்களில் இந்தியாவில் 3வது அலை மிக தீவிரமடையும். இதனால், முக்கிய நகரங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவதற்கு பதிலாக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.  நேற்று ஒரே நாளில் புதிதாக தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3,06,065 ஆக உள்ளது.

இது கடந்த 4 நாட்களாக இருந்து வந்த சராசரி தினசரி பாதிப்பை விட 8% குறைந்து காணப்படுகிறது. அதே போல, பலி எண்ணிக்கை, கடந்த 5 நாட்களை விட குறைந்து 439 ஆக உள்ளது. ஒமிக்ரான் பாதிப்பு உச்ச நிலையில் இருந்த டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில், கடந்த 2 வாரங்களில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. இது குறித்து டாக்டர் சுபாஷ் சலுங்கி கூறிய போது, ``இவ்வகை உருமாறிய வைரஸ் நடுத்தர நகரங்கள், கிராமங்களில் மட்டுமே பரவுகிறது. இன்னும் 8 முதல் 10 வாரங்களில் இது உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்று கூறினார்.

பிப். 15 முதல் குறையும் : இந்தியாவில் கொரோனா தொற்று 3வது அலையின் தீவிரம் பிப்ரவரி 15ம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறையும். ஏற்கனவே, சில மாநிலங்கள், மெட்ரோ நகரங்களில் தொற்று குறையத் தொடங்கி உள்ளது என்று ஒன்றிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை, 162.26 கோடி தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது.  81.80 லட்சம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், மார்ச் அல்லது ஏப்ரல் மாத இறுதியில் தொற்றின் தீவிரம் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இ்ந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார், முன்னாள் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : PA.2 not detectable in RTPCR testing; 3rd wave to intensify in coming days: Medical experts warn
× RELATED கர்நாடகாவில் பாலியல் புகாரில்...