இலங்கை கடற்படை கைப்பற்றிய 105 படகுகளை ஏலம் விட எதிர்ப்பு; பிப். 2 முதல் காலவரையற்ற ஸ்டிரைக்: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்தும், கைதான மீனவர்களை மீட்க வலியுறுத்தியும் பிப். 2ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையால் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2018 வரையில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள், பராமரிப்பின்றி சேதமடைந்த நிலையில் இலங்கை கடலோர பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் 105 படகுகளை அடுத்த மாதம் ஏலம் விடுவதற்கான நடவடிக்கையில் இலங்கை கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த முடிவை கைவிடக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நேற்று அறிவித்தனர். இதையொட்டி நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்திற்கு சேசுராஜா தலைமை வகித்தார்.

கூட்டத்தில், தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் முடிவிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இலங்கையில் மீட்க முடியாமல் இருக்கும் படகுகளுக்கு மாநில அரசு வழங்கியதுபோல், பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு ஒன்றிய அரசும் நிவாரணம் வழங்க வேண்டும்.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 19ம் தேதி மீன்பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் மூழ்கிய படகை மீட்பதற்கு செல்ல மீனவர் குழுவிற்கு அனுமதி வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கைகளை பிப். 2ம் தேதிக்குள் ஒன்றிய அரசு நிறைவேற்றா விட்டால், அன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதுடன், ஒன்றிய அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Related Stories: