×

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் தமிழக அரசின் முயற்சியால் கொண்டு வரப்பட்டது: ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் முதல்வர் நடவடிக்கை

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயிலச் சென்றுள்ளார். கடந்த 15ம் தேதி காலை 8 மணியளவில் அங்குள்ள அருவியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி இறந்து விட்டதாக தெரிவித்து, அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய ஏற்பாடுகளைச் செய்திட முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையினை ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுக்க சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனிடமும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், சஷ்டிகுமாரின் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரத் தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின் மூலம், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை 2.15 மணி அளவில் சஷ்டி குமார் உடல், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அவரது உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சஷ்டிகுமார் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர சிறப்பு நேர்வாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை அவருடைய சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல, தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி வாகன சேவையும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இந்நிலையில், இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த சஷ்டி குமாரை இழந்து வாடும், அவர் தம் குடும்பத்தினருக்கு முதல்வர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Philippines ,Tamil Nadu government ,Chief Minister ,OPS , The body of a medical student who died in the Philippines was brought by the Tamil Nadu government: the Chief Minister took action as requested by the OBS.
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!