×

யூடியூப் டீச்சர்

நன்றி குங்குமம் தோழி

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. ஆன்லைன் மூலம் கற்பிப்பது அதிகரித்து வருகிறது. ஆனால் ஆந்திராவின் ராஜமுந்திரி அருகேயுள்ள முராரி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் யூடியூப் மூலம் 3ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். மங்கா ராணி என்ற இந்த ஆசிரியை கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றுவது ராஜமுந்திரி நகராட்சி உயர்நிலைப்பள்ளியில்.

படித்தது பி.எஸ்.சி பி.எட். கம்ப்யூட்டர் பாடத்தில் பி.எட் படித்துள்ள இவர் பாடம் நடத்துவது 3ம் வகுப்பு மாணவர்களுக்கு. இதற்காக இவர் தொடங்கியுள்ள யூடியூப் சேனலுக்கு 44 ஆயிரம் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் சின்னஞ்சிறு பள்ளி மாணவ, மாணவிகள். விடுமுறையில் வீட்டில் இருக்கும்போது கூட படிக்கனுமா என கேட்கும் சிறுவர்கள் மத்தியில் இவரது சேனல் விரும்பிகள் புதிய வீடியோ எப்போது வெளியிடுவார் என காத்திருக்கின்றனர்.

வழக்கமாக பள்ளி வேலை நாளில் கூட வாரத்தில் 3 நாட்கள் வீடியோக்களை கொண்டு வகுப்புகளில் பாடம் நடத்துவார் மங்கா ராணி. இந்த வீடியோவில் ஆங்கில பாடல்கள் (ரைம்ஸ்), கடினமான கணக்குகளை எளிதாக புரிய வைக்கும் வகையில் கழித்தல், கூட்டல் கொண்டவையாகவே இருக்கும். அந்த பாடலை வகுப்பில் வீடியோ மூலம் ஆசிரியை காண்பிக்கும் போது குழந்தைகளும் கோரசாக பாடுவது தான் மங்கா ராணிக்கு கிடைத்த வெற்றி.

கடந்த 2012ல் வீடியோ மூலம் கற்பிக்கும் பணியை தொடங்கிவிட்டாலும் கொரோனா காலத்தில் அவரது யூடியூப் சேனலுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு முறை வீடியோவில் ஒளிபரப்பு செய்யப்படும் பள்ளி பாடங்களை அடுத்த வகுப்பில் அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் மனப்பாடமாக சொல்லிவிடுகிறார்கள். ``கூட்டுக்குடும்பத்தில் இருந்து வந்ததால் என்னால் குழந்தைகளின் தேவையை புரிந்து கொண்டு அதற்கேற்ப பாடம் தொடர்பான வீடியோக்களை உருவாக்கி வருகிறேன்.

இதனால் நான் பெரும்பாலும் கரும்பலகையில் எழுதுவதை விட வீடியோவாக எப்ப டீச்சர் போடுவீங்க என கேட்கும் குழந்தைகள் தான் அதிகம். நான் கணினி பட்டப்படிப்பு முடித்துள்ளதால் இந்த யூடியூப் சேனலை கையாள்வது எளிதாக உள்ளது.  இணைய தளத்தில் பல தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் அதை மாணவர்களுக்கு எளிமையாக கொண்டு செல்வது எப்படி என யோசித்ததால் தான் இந்த யூடியூப் சேனலை என்னால் வெற்றிகரமாக நடத்த முடிகிறது.

மேலும் 41 பேர் படிக்கும் எனது வகுப்பில் மாணவர்கள் வருகை பெரும்பாலும் 40க்கு குறையாது என்கிறார் மங்கா ராணி. அரசு பணியை செய்தோமா சம்பளம் வாங்கினோமா என்று இல்லாமல் மாணவர்களின் அறிவுக்கு தீனி போடும் மங்கா ராணி உண்மையிலேயே அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார் என்பதே உண்மை.

கோமதி பாஸ்கரன்

Tags : Youtube Teacher ,
× RELATED ஆரோக்கிய கூந்தலுக்கு உதவும் அர்கன் ஆயில்!