குடியரசு தின தேநீர் விருந்து ஒத்திவைப்பு: ஆளுநர் மாளிகை தகவல்

சென்னை: குடியரசு தினத்தன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற இருந்த தேநீர் விருந்து கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு மொத்தமாக 3 அலங்கார ஊர்திகள் மட்டுமே அணிவகுத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மணி நேரம் நடைபெறும். ஆனால், கொரோனா பரவலால் இந்த ஆண்டு 30 நிமிடங்களில் விழாவை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா அன்று ஆளுநரின் அழைப்பின் பேரில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு தேநீர் விருந்து கொடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தேநீர் விருந்து நிகழ்ச்சி ஒத்துவைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தற்போது நிலவும் கொரோனா பரவல் சூழலை கருத்தில் கொண்டு வருகிற 26ம் தேதி குடியரசு தின விழா அன்று ராஜ் பவனில் நடைபெற இருந்த தேநீர் விருந்து ஒத்திவைக்கப்படுகிறது. நிலைமை சீரான பின்னர் இந்த நிகழ்ச்சி நடைபெறும். மக்கள் அரசின் நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: