×

இன்ஜினியரிங் மாணவர்களுக்கு பிப். 1ம் தேதி செமஸ்டர் தேர்வு: ஆன்லைன் முறையில் நடக்கும்; அண்ணா பல்கலை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., (இன்ஜினியரிங்) மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பொறியியல், பாலிடெக்னிக் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை பட்டப்படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் அறிவித்தார்.

இந்த நிலையில், பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான தேர்வு அட்டவணை மற்றும் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் தேர்வில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு வழக்கமாக  நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் செமஸ்டர் தேர்வுகள், கொரோனா பரவல் காரணமாக ஜனவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பிப்ரவரி 1ம்  தேதி முதல் ஆன்லைனில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. மேலும் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வுகள் நடைபெற உள்ளது.

அண்ணா பல்கலைகழகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது: வருகிற பிப்.1ம் தேதி முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதன்படி காலையில் 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலையில் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் 3 மணி நேரம் தேர்வுகள் நடைபெறும். தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட கல்லூரிகளால் கூகுள் கிளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் A4 தாள்களில் விடைகளை எழுத வேண்டும். தேர்வு முடிந்த பின் அடுத்த 1 மணி நேரத்திற்குள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட கல்லூரியின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் மூலம் அனுப்ப வேண்டும்.

மேலும் மாணவர்கள் எழுதிய தேர்வுக்குரிய  விடைத்தாள்களை ஒவ்வொரு பாடத்தேர்வும் முடிந்த 1 வார காலத்திற்குள் கூரியர் அல்லது தபால் வாயிலாக மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவ்வாறு அனுப்பத் தவறினால் விடைத்தாள்கள் மதிப்பீடு  செய்யப்படாது. மேலும் மாணவர்கள் மின்னஞ்சல், வாட்ஸ் அப் வாயிலாக அனுப்பிய விடைத்தாள்களும், தபால் அல்லது கூரியர் மூலம் அனுப்பப்பட்ட விடைத்தாள்களும் ஒன்றாக இருந்தால் மட்டுமே விடைத்தாள் மதிப்பீடு மேற்கொள்ளப்படும். செமஸ்டர் தேர்வுகளை மாணவர்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே எழுத வேண்டும்.

மாணவர்கள் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் மாணவரின் தேர்வு ரத்துச் செய்யப்படும். விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது. அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள் இறுதியாக படித்த கல்லூரிகளை தொடர்பு கொண்டு தேர்வுக்கான அனுமதிச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை மூடப்பட்ட கல்லூரிகளில் படித்த மாணவர்கள் அரியர் எழுத விரும்பினால், அவர்களுக்கு வேறொரு கல்லூரி பொறுப்புக் கல்லூரியாக ஒதுக்கப்படும்.

விடைத்தாள்களில் பதிவு எண், பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர் உள்ளிட்டவற்றை வினாத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும். மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வினாத்தாளில் அனைத்து விபரங்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில் தகவல்களை தவறாக பதிவு செய்தாலோ, சிறப்புக் குறியீடு ஏதாவது செய்திருந்தாலோ அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தம் செய்யப்படாது. மாணவர்கள் தங்களின் விபரங்களையும், வருகைப் பதிவினையும் https://student_attdetails.annauniv.edu என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Tags : Anna University , Feb for engineering students. 1st Semester Exam: Will be conducted online; Anna University Announcement
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு