உத்தரபிரதேச தேர்தலில் காங். முதல்வர் வேட்பாளர் ‘பல்டி’ ஏன்?.. மாஜி முதல்வர் மாயாவதி கேள்வி

லக்னோ: காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில், திடீரென நிலைபாட்டை மாற்றியது ஏன்? என்று முன்னாள் முதல்வர் மாயாவதி கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள காங்கிரஸ்  தலைமையகத்தில் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ​​காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் வெளியிட்டனர். அப்போது உத்தரபிரதேச  காங்கிரசின் முதல்வர் யார்? என்று கேட்டபோது, ​​தன்னுடைய பெயரை மறைமுகமாக தெரிவித்தார். ஆனால், அடுத்த நாள் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், தான் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று கூறினார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி இதுகுறித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் (பிரியங்கா) சில மணி நேரங்களிலேயே முதல்வர் வேட்பாளர் நிலைப்பாட்டை மாற்றி விட்டார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், அக்கட்சிக்கு மக்கள் வாக்களித்து, தங்களது வாக்குகளை வீணடிக்க வேண்டாம். பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். உத்தரபிரதேச மக்கள் காங்கிரஸ் கட்சியை வாக்குகளை பிரிக்கும் கட்சியாக பார்க்கிறார்கள். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்காகவும் செயல்படும் ஆட்சி அமைய வேண்டுமானால், பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: