முழு ஊரடங்கு காரணமாக மாநில எல்லை வரை இயங்கிய ஆந்திர பஸ்கள்: தமிழகத்திற்கு நடந்து வந்த பயணிகள்

வேலூர்: உருமாறிய கொரோனா ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்களை கண்காணிக்க மாவட்டம் முழுவதும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மாநில எல்லை சோதனை சாவடிகள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள் என பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த வாகனங்களை திருப்பி அனுப்பினர். இருப்பினும் சித்தூர் போன்ற பகுதிகளில் இருந்து வேலூருக்கு வந்த தனியார் பஸ்கள் காட்பாடி எல்லை வரை இயக்கப்பட்டது. சிறிது தொலைவு தூரம் நடந்து வந்த பயணிகள் தமிழக எல்லையில் இருந்த ஆட்டோக்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் பயண சீட்டுகளை வைத்து கொண்டு பயணம் செய்தவர்களை அனுமதித்தனர். சில பயணிகள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து ரயில்கள் மூலம் பயணம் மேற்கொண்டனர். ஆட்டோக்கள் போதுமான அளவு இல்லாததால் பெரும்பாலான பயணிகள் குழந்தைகளுடனும் நடந்து சென்றனர்.

Related Stories: